புதுடெல்லி: பொதிகை மலையில் மலையேற்ற (டிரெக்கிங்) வசதி அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: பொதிகை மலையில் மலையேறும் ஆர்வம் உள்ளவர்களுக்காக டிரெக்கிங் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும். இந்த பட்ஜெட்டில் நாட்டின் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பதோடு, சாகசச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அமைந்துள்ள பொதிகை மலைப் பகுதியில் சூழலியல் சமநிலை மாறாமல் மலையேற்ற வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதே போல், உத்தரா கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் மலையேற்ற சுற்றுலா மேம்படுத்தப்படவுள்ளது.
மூன்று புதிய பார்வை மையங்கள்: அதைப் போலவே, சென்னைக்கு அருகிலுள்ள புலிகாட் ஏரி என்று அழைக்கப்படும் பழவேற்காடு ஏரியில் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில், பேர்ட் வாட்ச்சிங் என்று அழைக்கப்படும் பறவைகளைப் பார்த்து ரசிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். மொத்தம் மூன்று புதிய பிரத்யேகப் பார்வை மையங்கள் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்படும்.
4 ஆயிரம் மின்சார பேருந்துகள்: அந்த வரிசையில், தமிழர்களின் தொன்மையான வரலாற்றைப் பறைசாற்றும் விதமாக ஆதிச்சநல்லூரில் நவீன கலாச்சார மையம் அமைக்கப்படவுள்ளது.
அதேபோல் ஒடிசா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆமைகள் முட்டையிட்டு தங்களது குஞ்சுகளைப் பாதுகாக்க வசதி ஏற்படுத்தப்படும். அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் சுற்றுலா வளர்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
இந்த மாநிலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக 4 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்கப்படும். அதேபோல் அந்த மாநிலங்களில் மருத்துவ சுற்றுலாவும் மேம்படுத்தப்படும். இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் அந்த மாநிலங்களில் ரூ.10,000 கோடி நிதி செலவிடப்படும்.
நாடு முழுவதும் லோத்தால், ஹஸ்தினாபூர், சாரநாத் உள்ளிட்ட 15 தொல்பொருள் மையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாரம்பரியப் பாதுகாப்பு மற்றும் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இந்த நிதி செலவிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.