மூணாறில் உள்ள ஆகாய உணவகம் பழுதாகியதால் உள்ளே சிக்கிக் கொண்ட சுற்றுலா பயணிகள்

 
சுற்றுலா

மூணாறில் ‘ஆகாய’ உணவகத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் 2 மணி நேரத்துக்குப் பின்பு மீட்பு!

செய்திப்பிரிவு

மூணாறு: கேரளா மாநிலம் மூணாறு சுற்றுலா மையத்தில் 120 அடி உயரத்தில் ‘ஸ்கை டைனிங் என்ற ஆகாய’ உணவகத்தில் சுற்றுலா பயணிகள் நேற்று சிக்கிக்கொண்டனர். 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்பு அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மூணாறு அருகே உள்ள ஆனச்சால் பகுதியில் சாகச சுற்றுலாவின் ஒரு பகுதியாக, தனியாருக்குச் சொந்தமான ஆகாய உணவகம் 120 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கிரேன் மூலம் உயரே கொண்டுசெல்லப்படும் இந்த உணவகத்தில் சுற்றுலாப் பயணிகள் மேலிருந்தவாறே இயற்கை காட்சிகளை ரசித்தபடி, அரை மணி நேரம் உணவு மற்றும் காபி, டீ அருந்தலாம். இதி்ல் ​ஒரே நேரத்தில் 15 பேர் அமரக்கூடிய இருக்கை வசதி உள்ளது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கிரேனில் பழுது ஏற்பட்டதால், மங்களூரைச் சேர்ந்த 4 சுற்றுலா பயணிகள் மற்றும் உணவு பரிமாறும் ஊழியர் ஒருவரும் அதில் சிக்கிக்கொண்டு தவித்தனர்.

தகவலறிந்து அடிமாலியில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர், 2 மணி நேரம் போராடி சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

கிரேனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட சுற்றுலா துறை உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT