சுற்றுலா

வெள்ளப்பெருக்கு: சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை

என்.கணேஷ்ராஜ்

கம்பம்: மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் சுருளிதீர்த்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து 8 கிமீ.தூரத்தில் சுருளிதீர்த்தம் அருவி அமைந்துள்ளது. மேகமலையில் உள்ள ஹைவேவிஸ் தூவானம் அணை நீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் அருவியாக கொட்டுகிறது. கடந்த சில மாதங்களாக வலுவான மழை இல்லாததால் நீர் வரத்து குறைந்து கொண்டே சென்று கடந்த 20-ம் தேதி முற்றிலும் வறண்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இங்கு குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சுருளி அருவியில் இன்று (சனி) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆகவே சுற்றுலா பயணிகள் அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், “இந்த அருவி வறண்டாலும் அனுமதிப்பதில்லை. நீர்ப்பெருக்கு ஏற்பட்டாலும் உள்ளே விடுவதில்லை. குறைந்தபட்சம் தூரத்தில் நின்று அருவியை ரசிக்கவாவது அனுமதிக்க வேண்டும்.

இதன் மூலம் வனத்துறைக்கும் வருவாய் கிடைக்கும். ஒரு கிமீ தூரம் உள்ள அருவிப்பகுதிக்கு நடப்பது, இயற்கையை ரசிப்பது ரம்யமான இச்சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவிக்கவும் ஏதுவாக இருக்கும்,” என்றனர்.

SCROLL FOR NEXT