கொடைக்கானல் மலைக்கிராமங்களில் விதிகளை மீறி சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள்.

 
சுற்றுலா

கொடைக்கானல் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் ஆவணம் இன்றி தங்குவதற்கு தடை

காவல் துறை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

பழநி: கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளை தங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து கஞ்சா மற்றும் போதைக் காளான் விற்பனை தாராளமாக நடக்கிறது. போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தனிப்படை போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் 2 பேரிடம் போதை ஸ்டாம்ப், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சமீப காலமாக கொடைக்கானலில் கஞ்சா, போதைக் காளான் உள்ளிட்டவைகளை தாண்டி, வெளிநாட்டு போதைப் பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.

இந்த போதைக் கும்பல் சுற்றுலாப் பயணிகள் போன்று விடுதிகளில் அறைகளை எடுத்து தங்கி, சுற்றுலாப் பயணிகள், இளைஞர்களுக்கு விற்பது தெரிய வந்துள்ளது. இதைத் தடுக்க, உரிய ஆவணங்கள் இல்லாமல் சுற்று லாப் பயணிகளை தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு அனுமதிக்க கூடாது.

விடுதி உரிமையாளர்களிடம் முறையான ஆவணங்கள் இருக்க வேண்டும். சட்ட விரோதமாக இயங்கினாலோ, சுற்றுலாப் பயணிகளுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்தாலோ உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து தங்கும் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை விடுதியில் தங்க வைப்பதற்கு முன் போலீஸிடம் அனுமதி பெற வேண்டும் அல்லது தகவல் தெரிவிக்க வேண்டும். விடுதியில் தங்கும் சுற்றுலாப் பயணியின் ஆதார் அடையாள அட்டை நகல் அல்லது ஆதார் எண் பெற வேண்டும். இந்த விதிமுறைகளை விடுதி உரிமையாளர்கள் கட்டாயம் கடைப்பிடித்து, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT