சுற்றுலா

தேனி மாவட்டத்தில் இயற்கை வளமும், வாய்ப்பும் இருந்தும் கூடுதல் வருவாயை தவறவிடும் சுற்றுலா துறை

என்.கணேஷ்ராஜ்

போடி: தேனி மாவட்டத்தில் இயற்கை வளத்துடன் கூடிய ஏராளமான சுற்றுலாத் தலங்களும், பாரம்பரிய கோயில்களும் அதிகளவில் உள்ளன. ஆனால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உரிய திட்டங்களை செயல்படுத்தாததால் கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பை தவற விடும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழக கேரள எல்லையில் இடுக்கி, தேனி மாவட்டங்கள் அருகருகே அமைந்துள்ளன. இரண்டுமே வெவ்வேறு தனித்துவமான நிலப் பரப்புகளை கொண்டுள்ளன. இடுக்கியைப் பொறுத்தளவில் குளிர்ந்த பருவநிலை, பசுமைப் பள்ளத்தாக்குகள், மூடுபனி, நீர்த்தேக்கங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இவற்றை பயன்படுத்தி சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது.

தேனியைப் பொறுத்தளவில் அருவிகள், போடி மெட்டு, குமுளி, கம்பம்மெட்டு உள்ளிட்ட குளிர்ந்த பருவநிலை கொண்ட மலைச்சாலைகள், மேகமலை, அடுக்கம் போன்ற மலைவாசஸ்தலங்கள் உள்ளன.

மேலும் பிரசித்திபெற்ற குச்சனூர் சனீஸ்வரர் கோயில், தென்காளகஸ்தி எனும் காளாத்தீஸ்வரர், நூற்றாண்டுகள் பழமையான பூலாநந்தீஸ்வரர், கவுமாரியம்மன், கதலி நரசிங்கப் பெருமாள் கோயில்களும், கருவறை கதவுகளை அம்மனாக வழிபடும் பிரத்யேக வரலாறு கொண்ட தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அதிகளவில் உள்ளன.

மேலும் ஆண்டிபட்டியில் அருங்காட்சியகம், வைகை அணை, பென்னிகுவிக் மணிமண்டபம், கம்பம் பகுதியில் கண்கவர் திராட்சை தோட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத்தலங்களும் உள்ளன. இவ்வளவு வாய்ப்புகள் இருந் தும் சுற்றுலா வளர்ச்சி என்பது இன்னும் எட்ட வேண்டிய தூரத்திலேயே இருந்து வருகிறது.

வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் ஒவ் வொரு இடத்துக்கும் வாடகை வாகனத்திலேயே செல்ல வேண்டியிருப்பதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஆகவே ரயில் நிலையங் களில் இருந்து பல கோயில்களை ஒருங்கிணைத்து ஆன்மிகத் தொகுப்பாகவும், சுற்றுலா இடங்களை ஒருங்கிணைத்து பொழுதுபோக்கு பிரிவாகவும் சிறப்பு பேருந்துகளை இயக்கலாம்.

இதன் மூலம் ஒரே நாளில் குறைந்த செலவில் அனைத்து இடங்களையும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க முடியும். இதனால் சுற்றுலா சார்ந்த தொழில்களும் வளர்ச்சி அடையும். இதுகுறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகையில், மூணாறு அருகே பள்ளிவாசல் என்ற ஊராட்சியில் பேருந்து நிறுத்தத்தை ரயில் போன்று அமைத்துள்ளனர். அதன் மேலே ஏறி நின்று பள்ளத்தாக்கை ரசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சுற்றுலாவை மையப்படுத்தி வித்தியாசமான பல முயற்சிகள் செய்யப்பட் டுள்ளன. இதேபோல் இங்கும் சுற்றுலா மேம்பாட்டில் கவனம் செலுத்தினால் வருவாய் அதிகரிக்கும் என்றனர்.

SCROLL FOR NEXT