சுற்றுலா

கோவை செம்மொழி பூங்காவில் மக்களுக்கு அனுமதி - நுழைவுக் கட்டணம் எவ்வளவு?

இல.ராஜகோபால்

கோவை: கோவை செம்மொழிப் பூங்காவை நாளை (டிச.11) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி செலவில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நவம்பர் 25-ம் தேதி திறந்து வைத்தார்.

பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரி கமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம், பசுமை வனம் உள்ளிட்ட பல வகையான தோட்டங்கள் 38.69 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ளன.

பூங்காவை பொதுமக்கள் பார்வையிட டிசம்பர் 11-ம் தேதி (நாளை) முதல் அனுமதி வழங்கப்படும். பொதுமக்களுக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு (10-வயதிற்குட்பட்டோர்) ரூ.5, நடைபயிற்சி செய்வோருக்கு ஒரு நபருக்கு (மாதாந்திர கட்டணம்) ரூ.100, கேமராவிற்கு ரூ.25, வீடியோ கேமராவிற்கு ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவிற்கு (நாளொன்றுக்கு) ரூ.25,000, குறும்பட ஒளிப்பதிவிற்கு மற்றும் இதர ஒளிப்பதிவிற்கு ரூ.2000 என கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT