கோப்புப் படம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஏரியில் படகு சவாரி, சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
டிட்வா புயல் காரணமாக கொடைக்கானல் மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. காற்றின் வேகம் குறையாததால் மாலை வரை படகு சவாரிக்கு அனுமதிக்கவில்லை.
இதேபோல், சுற்றுலா இடங்களான மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள், குணா குகை மற்றும் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். நாள் முழுவதும் விட்டு விட்டு தொடர் மழை பெய்தது. வெள்ளி நீர் வீழ்ச்சி, கரடிச்சோலை உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும், மலைச்சரிவுகளில் புதிய அருவிகள் தோன்றி ரம்மியமாக காட்சியளித்தன.
பகலிலேயே சாலைகள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன.
மழை, பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் வெளியே வராமல் தங்கும் விடுதிகளில் முடங்கினர். பலத்த காற்று காரணமாக மலைக் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பழநி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானலில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.