ஊட்டியில் நடக்கும் நாய்கள் கண்காட்சியில் பல்வேறு இன நாய்கள் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தன. படங்கள்: ஆர்.டி.சிவசங்கர்
ஊட்டி: ஆண்டுதோறும் கோடை சீசனின்போது, தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் ஊட்டியில் நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு 138 மற்றும் 139-வது நாய்கள் கண்காட்சி ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தினமும் நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஹோண்டு, லேப்ரடார், ஜெர்மர் ஷெப்பர்டு, டாஸ்ஹவுண்ட், கோல்டன் ரீட்டிவர், கிரேட் டேன், பீகிள், பார்டர் கோலி, மினியேச்சர் பின்சர், பஷ்மி ஹோவுண்ட், பிளாக் ஜெர்மன் ஷெப்பர்டு, பக், டாபர்மேன் ஆகிய நாய்கள் பங்கேற்றுள்ளன. இந்தாண்டு வெல்ஷ் கார்கி மற்றும் ஷப்பர்க்கி ஆகிய புதிய இன நாய்கள் பங்கேற்றன.
பீகிள், டாஷ்சண்டு, நாட்டு ரக நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகிய இந்திய ரக நாய்களின் சிறப்பு கண்காட்சி நேற்று நடந்தது. நாய் கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் செல்லப்பிராணிகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்கள் செல்லப்பிராணிகளின் திறமைகளை வெளிப்படுத்தினர். கண்காட்சியின் இறுதி நாளான இன்று, போட்டியில் பங்கேற்ற நாய்களில் ஒன்றுக்கு ‘ஆண்டின் சிறந்த நாய்’ விருது வழங்கப்படும்.