புலி நடமாட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பைன் பாரஸ்ட் சுற்றுலா தலம் மூடப்பட்டது.
ஊட்டி: ஊட்டி அருகே புலி தாக்கி பழங்குடியின முதியவர் உயிரிழந்த நிலையில், புலியின் நடமாட்டம் குறித்து தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம் ஆகிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் ஊட்டி சாண்டிநல்லா அருகிலுள்ள சின்னகாடி மந்து பகுதியில் புலி தாக்கி தோடரினத்தை சேர்ந்த பூதாள்குட்டன் (58) என்பவர் உயிரிழந்தார்.
இறந்தவரின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். சின்னகாடிமந்து பகுதியில் வலம் வரும் புலியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நேற்று முன் தினம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், புலி தாக்கி உயிரிழந்த பூதாள்குட்டன் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணமாக ரூ.50, ஆயிரமும் ரொக்கமும், ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் காசோலையையும் நீலகிரி வனகோட்ட உதவி வனப்பாதுகாவலர் மணிமாறன் வழங்கினார்.
புலி தாக்கி உயிரிழந்த பூதாள்குட்டனின் குடும்பத்தினருக்கு உதவி வனப்பாதுகாவலர் மணிமாறன் இழப்பீடு தொகை வழங்கினார்.
வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘புலி நடமாட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் பகுதி, நவீன தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. புலியின் நடமாட்டத்தைக் கண்டறிய பல்வேறு இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
களப்பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு பணியாளர்கள் மூலம் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. சின்னகாடிமந்து பகுதி மக்களுக்கு பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூட்டிங் மட்டம், பைன் பாரஸ்ட் ஆகிய சூழல் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன’ என்றனர்.