சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா ரூ.1.85 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காக்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவும் ஒன்று.
இப்பூங்கா 602 ஹெக்டேர் பரப்பளவில், வன விலங்குகளுக்கு உகந்த இயற்கையான வன சூழலில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் 137 விலங்கினங்களை சேர்ந்த 1600-க்கும் மேற்பட்ட விலங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பூங்காவுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். சென்னை, புறநகர் பகுதிகளில் குழந்தைகளின் முக்கிய பொழுதுபோக்கிடமாக வண்டலூர் பூங்கா உள்ளது. சென்னைக்கு வரும் வெளிநாட்டினர் பார்வையிடும் முக்கிய இடமாகவும், இப்பூங்கா திகழ்கிறது.
இங்கு ஆண்டுக்கு சராசரியாக 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இதன் மூலம் பூங்கா நிர்வாகத்துக்கு ரூ.25 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது.
பார்வையாளர்களை ஈர்க்கவும், அவர்களுக்கான வசதிகளை அதிகரிக்கவும் இப்பூங்காவை ரூ.1.85 கோடியில் மேம்படுத்தவும் பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, பழைய ஓவியங்களை புதுப்பிப்பது, கல் ஓவியங்களை வரைவது, தடுப்புகளுக்கு வண்ணம் தீட்டுவது, மீட்கப்பட்ட விலங்குகள் பராமரிப்பு மையத்தில் உள்ள சிங்கம், சிறுத்தை அடைப்பிடங்களை சீரமைப்பது, மழைநீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்துதல், அனைத்து கழிவறைகளையும் தூய்மையாக பராமரித்தல், சிசிடிவி கண்காணிப்பு முறையை மேம்படுத்துவது, பார்வையாளர் ஓய்வறைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பூஙகா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.