மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள். படங்கள்: நா.தங்கரத்தினம்
மதுரை: தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் அவர்களை அதிகம் கவர்ந்த சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டங்கள் பட்டியலில் மதுரை 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது. மதுரை அரசியலுக்கு மட்டுமல்ல, தமிழர்களின் ஆன்மிகம், வர்த்தகம், கலை பண்பாட்டின் தலைநகரமாகவும் திகழ்கிறது. மனதுக்கு மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் அள்ளிக் கொடுக்கும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் மதுரையில் நிறைந்துள்ளன.
அதனால், தற்போது கோயில்களைத் தாண்டி, உணவு பாரம்பரியத்தை அறிந்து கொள்வதற்காகவும் தற்போது சுற்றுலாப் பயணிகள் வர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பொங்கல் பண்டிகை காலத்தில் ஜல்லிக்கட்டு, சித்திரைத் திருவிழா காலத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தரும் வைபவம், மற்ற காலங்களில் வரலாற்று நடைபயணங்கள், பழைய சந்தைகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தொல்பொருள் தலங்களைப் பற்றியும் அறிவதற்கு மதுரைக்கு பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரையின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் சுற்றுலாதான் முதுகெலும்பாக உள்ளது. தற்போது உணவுச் சுற்றுலாவும் மதுரைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரித்துள்ளது.
கறிதோசை, வெங்காயக்கறி, ஜிகர்தண்டா, பட்டர் பன், பால் பன், பன் பரோட்டோ, பருத்திப்பால், முள்ளு முருங்கை வடை என விதவிதமான சைவ, அசைவ உணவுகளுக்காகவும் சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு விரும்பி வருகின்றனர். காணொலிகள் மற்றும் சமூக ஊடக மதிப்புரைகள் இந்த உணவுச் சுற்றுலா ஆர்வத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு தூண்டுகின்றன.
மதுரைக்கு கடந்த 2018-ல் 2 கோடியே 45 லட்சத்து 16 ஆயிரத்து 815 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 2 லட்சத்து 65 ஆயிரத்து 121 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்தனர். 2019-ல் 3 கோடியே 65 லட்சத்து 57 ஆயிரத்து 527 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2 லட்சத்து 52 ஆயிரத்து 947 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
கரோனாவுக்குப் பிறகு மதுரைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய ஆரம்பித்தது. 2020-ல் 1 கோடியே 38 லட்சத்து 77 ஆயிரத்து 585 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 81 ஆயிரத்து 20 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட மொத்தம் 1 கோடியே 39 ஆயிரத்து 58 ஆயிரத்து 605 பேர் மதுரைக்கு சுற்றுலா வந்தனர்.
திருமலை நாயக்கர் மகால்.
2021-ல் 99 லட்சத்து 33 ஆயிரத்து 666 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 195 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட அந்த ஆண்டு வெறும் 99 லட்சத்து 33 ஆயிரத்து 861 பேர் மட்டுமே வந்திருந்தனர். 2022-ல் 1 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரத்து 414 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 16 ஆயிரத்து 637 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
2023-ல் 1 கோடியே 16 லட்சத்து 28 ஆயிரத்து 92 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 26 ஆயிரத்து 154 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.
2023-ம் ஆண்டுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் வருகை மீண்டும் மதுரைக்கு அதிகரிக்க தொடங்கியது.
2024-ல் 2.2 கோடி சுற்றுலாப் பயணிகளும், 2025-ல் 2.29 கோடி சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர். 57,564 ஆக இருந்த வெளிநாட்டுப் பயணிகள் வருகை, 2024-ம் ஆண்டில் 98,770 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த இடங்களில் தற்போது மதுரை தமிழகத்தில் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.
விரைவில் முதல் இடத்தை பிடிக்க, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அனைவரையும், திருமலை நாயக்கர் மகால், அழகர் கோயில், சோலமலை முருகன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், காந்தி அருங்காட்சியகம், வண்டியூர் மாரியம்மன் கோயில், கீழக்குயில்குடி, கீழவளவு சமணர் மலைகள், ஒத்தக்கடை யானைமலை போன்ற மற்ற சுற்றுலாத் தலங்களையும் சுற்றிப் பார்க்க வைப்பதற்கு தேவையான வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினர்.