சுற்றுலா

‘செல்ல முடியாத’ இடங்களும் சுற்றுலா பகுதிகளாக அறிவிப்பு - தேனி மாவட்ட தகவல் பலகையால் குழப்பம்

என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுற்றுலாத் துறை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல இடங்களுக்கு செல்ல முடியாத நிலையே உள்ளது. ஆகவே, புது சுற்றுலாத் தலங்களை இதில் குறிப்பிட்டு மேம்பாட்டுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் கேரளாவுக்கு அருகில் அமைந்துள்ளதால் காலநிலையிலும், புவியியல்அமைப்பிலும் அதன் தன்மையை வெகுவாய் கொண்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலாவுக்கான ஏராளமான இடங்களை கொண்டுள்ளது. இதற்காக தேனி வரும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தெரிந்துகொள்வதற்காக சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு இடங்களில் இது குறித்த விபர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள அகமலை, வெள்ளிமலை, சோத்துப்பாறை அணை, மங்கலதேவி கண்ணகி கோயில் போன்ற இடங்களுக்கு வெளியாட்கள் எளிதில் செல்ல முடியாது. கட்டுப்பாடுகளும் அதிகம். டாப்ஸ்டேஷனைப் பொறுத்தளவில் கேரளா வழியாகவே பாதை உள்ளது. கும்பக்கரை,  சுருளிஅருவிகள் ஆண்டின் பல மாதங்கள் மூடியே கிடக்கின்றன. மஞ்சளாறு அணையில் எந்த அடிப்படை வசதியும் இல்லை.

இதனால் விளம்பர பலகையை நம்பி பயணிக்கும் சுற்றுலா ஆர்வலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆகவே, மற்ற சுற்றுலா தலங்களின் பெயர்களை இதில் இணைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இது குறித்து அவர்கள் கூறுகையில், “ஆண்டிபட்டி அருங்காட்சியகத்தில் ஏராளமான வரலாற்று சான்றுகள் நிறைந்துள்ளன. ஆனால் சுற்றுலாத் துறை அறிவிப்பில் இந்த இடம் குறிப்பிடப்படவில்லை.

இதுபோல வலசை வரும் பறவைகளின் புகழிடமான மீனாட்சியம்மன் கண்மாய், குதூவல் எனப்படும் வித்தியாசமான மணல் குவியல்களை கொண்டுள்ள பொட்டிப்புரம், யுனேஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள உலகப் புகழ்பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் வியூபாய்ண்ட், ஆசியாவின் அதிக காற்று வீசும் பகுதியான கம்பம்மெட்டு, மூலவைகை தோன்றுமிடம், மலைச்சாலை வியூ உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன. இவற்றை முன்னெடுத்து சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT