கம்பம் மெட்டு கேரளப் பகுதியில் அமைந்துள்ள குறவன், குறத்தி மலை சுற்றுலாத் தலம்.
படம்: என்.கணேஷ் ராஜ்
கம்பம்: கம்பம் மெட்டு தமிழகப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக வியூ பாயின்ட் அமைக்க வனத் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கோம்பை வனச்சரக பகுதியில் மேல் முடக்கு, ராமக்கல் மெட்டு, தண்ணிப் பாறை, வெள்ளைப் பாறை, தொப்பிப் பாறை உள்ளிட்ட பல்வேறு மலைத்தொடர்கள் உள்ளன.
இங்கு கரடி, நரி, சிறுத்தை, மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இதில் ராமக்கல் மெட்டு மலையின் அடிவாரம் இங்குதான் உள்ளது. இந்த மலை உச்சியின் மறுபுறம் கேரளம் உள்ளது. அங்கு குறவன், குறத்தி மலை சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.
ஆசியாவிலேயே அதிகம் காற்று வீசும் பகுதிகளில் ஒன்றாக இப்பகுதி உள்ளது.
இந்நிலையில், இங்குள்ள தமிழக வனப்பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளை கவர புதிய தலத்தை ஏற்படுத்த கம்பம் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக குறவன், குறத்தி மலையின் அருகே வியூ பாய்ண்ட் ஒன்றை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் தமிழக பகுதி பள்ளத்தாக்கை பாதுகாப்புடன் பார்வையிடவும், வீசும் காற்றை ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
மேலும், அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தவும், கூடுதல் பணியாளர்கள் நியமனங்களும் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாத் தலம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் வனத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், சுற்றுலாப் பயணிகளும் பல்வேறு வசதிகளை பெறும் நிலை உள்ளது.