ஆழியாறு கவியருவியில் நேற்று ஆர்ப்பரித்து கொட்டிய காட்டாற்று வெள்ளம்.
ஆனைமலை: ஆழியாறு கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
ஆழியாறு கவியருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சண்முகா எஸ்டேட், சக்தி எஸ்டேட், தலநார் எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்வதால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் மற்றும் சிற்றாறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதனால் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் உடைந்துள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதனால் நேற்று கவியருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் காலை 10 மணி அளவில் ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டனர். நீண்ட தொலைவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மழையின் அளவு குறைந்து நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாநகரில் நேற்று முன்தினம் இரவு சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது.
இதனால் மாநகரில் உள்ள பல்வேறு சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறும் சாலைகள் சேறும் சகதியுமாக மாறி வாகன ஓட்டிகள் செல்வதற்கே சிரமப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்): பீளமேடு விமான நிலையம் 2.70, வேளாண் பல்கலை. 15, பி.என்.பாளையம் 19, மேட்டுப்பாளையம் 8, பில்லூர் அணை 42, அன்னூர் 2.20, கோவை தெற்கு தாலுகா 4.40, தொண்டாமுத்தூர் 6, சிறுவாணி அடிவாரம் 16, மதுக்கரை 10, போத்தனூர் 2, மாக்கினாம்பட்டி 10, பொள்ளாச்சி 91, கிணத்துக்கடவு 4.40, ஆனைமலை 20, ஆழியாறு 15.80, சின்கோனா 3, சின்னக்கல்லாறு 7.