சென்னை: கோடை விடுமுறை சுற்றுலா பயணிகளுக்காக சென்னை - பக்டோக்ரா - சென்னை இடையே நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் நாளை தொடங்குகிறது.
கோடை விடுமுறையில் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் மக்கள் செல்ல தொடங்கியுள்ளனர். மேற்குவங்கம் மாநிலத்தில் பக்டோக்ரா நகரம் புகழ்பெற்ற மலை வாசஸ்தல சுற்றுலா தலமாக திகழ்கிறது.
இந்த பக்டோக்ரா நகருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை நாளை (1-ம் தேதி) முதல் தொடங்குகிறது. இந்த விமானம் திங்கள் தவிர, வாரத்தில் 6 நாளும் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.20 மணிக்கு பக்டோக்ரா சென்றடைகிறது. பக்டோக்ராவில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் விமானம் நண்பகல் 12.20 மணிக்கு சென்னை வந்தடைகிறது.
பக்டோக்ரா சுற்றுலாத் தலமாக மட்டும் இல்லாமல், சென்னையில் இருந்து செல்பவர்களுக்கு கிழக்கு இமயமலையின் நுழைவு வாயிலாகவும் இருப்பதால், இந்த விமான சேவைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
அதேபோல், கோடை விடுமுறைக்காக புனே, மும்பை, கொச்சி, பாட்னா, சண்டிகர், கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் நாளை முதல் கூடுதல் விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தொடங்குகிறது.