படம்: எஸ்.சத்தியசீலன்
பாரம்பரியம் மாறாத வின்டேஜ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள 'சென்னை உலா பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகரின் பழமை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களைக் கண்டு களிக்க வசதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக 'சென்னை உலா' பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகரத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியம், வள்ளுவர் கோட்டம், மயிலாப்பூர் லஸ் கார்னர், விவேகானந்தர் இல்லம், மெரினா உள்ளிட்ட 16 இடங்களில் 'சென்னை உலா பேருந்துகள் இயக்கப்படும்.
தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 10 முதல் இரவு 10 மணி வரையும் இப்பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்தில் சென்னை மாநகரின் புராதன சின்னங்கள் மற்றும் முக்கிய இடங்கள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு நிறுத்தங்கள் வருவதற்கு முன்பாக அந்த வரலாறுகள் குறித்து ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படும். இந்த பேருந்துகள் நாளை (ஜன.16) முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படவுள்ளன.
இந்நிலையில், இந்தப் பேருந்து இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்து தலைமைச் செயலகம் வரை பேருந்தில் பயணம் செய் தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கடந்த 20- 25 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த பேருந்துகளைப் போல் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சென்ட்ரல் ரயில் நிலையம் தொடங்கி எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம் என முக்கிய இடங்களைக் கடந்து கடற்கரை சாலைகளை வந்தடைந்து மீண்டும் சென்ட்ரல் என சுற்றுவட்ட பாதையில் அரை மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என இயக்கப்பட உள்ளன.
ஒரு நபர் 50 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துக் கொண்டால், குறிப்பிடப்பட்ட நிறுத்தங் களில் இறங்கி சுற்றி பார்க்கலாம். பின்னர் அடுத்து வரும் பேருந்தில் ஏறி அடுத்த இடங் களுக்குச் செல்லலாம். இவ்வாறு நாள் முழுவதும் பயணிக்கலாம். சென்னை மாநக ராட்சியின் தொன்மையை அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நினைவுச் சின்னங் களின் பெருமைகளை விளக்கும் வகையில் தமிழ், ஆங்கிலத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேருந்துகள் 1980-களின் கால கட்டத்தை நினைவு கூரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் நகரத்தின் முக்கிய இடங்களை தங்கள் வசதிக்கேற்ப பார்க்க உதவும் சேவை (ஹாப்-ஆன், ஹாப் - ஆஃப்) இதன் சிறப்பம்சமாகும். குறிப்பாக மகளிர், மூத்த குடிமக்கள், குழந்தைகள், பள்ளி குழுக்களுக்கு நன்மை பயக்கும். மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயணிக்கும் வகையில் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மெரினா கடற்கரை அல்லது நடத்துநரிடம் ரூ.50-க்கான பயணச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், 'சென்னை ஒன்' செயலி வழியாக வும் பயணச் சீட்டு பெறலாம்.
இப்பேருந்துகளின் வழித்தடத்தில் உள்ள இடங்களுக்கு, சுற்றுலாவாக இல்லாமல் செல்லும் பயணிகளும் சொகுசுப் பேருந்து கட்டணத்தில் மற்ற பேருந்துகளைப் போல பயணிக்கலாம்.