பெரியாறு அணையில் இருந்து கொண்டுவரப்பட்டு வைகை அணையின் நீர்தேக்கப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
ஆண்டிபட்டி: பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கொண்டுவரப்பட்ட 2 படகுகளை பராமரித்து சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்பட உள்ளது என்று நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசின் ஜலரத்னா, கண்ணகி ஆகிய 2 படகுகள் நீர்வளத் துறையினரின் குடியிருப்பு வளாகத்திலே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
புதிய படகுகள் இயக்கத்தில் இருந்ததால் இந்தப் படகுகள் பல மாதங்களாக பயன்பாடின்றியே இருந்தது. மேலும் பராமரிப்பும் இல்லாததால் படகுகளின் இயல்பு நிலை பாதிக்கத் தொடங்கியது.
ஆகவே, தமிழகத்தில் உள்ள அணைகளுக்கு இந்த படகுகளை இடமாற்றம் செய்ய நீர்வளத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
இதனடிப்படையில் இந்த இரண்டு படகுகள் நேற்று (அக்.4) தேக்கடி ஏரிக்கரையில் இருந்து எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை தொடங்கியது. இதற்காக கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்பு படகுகள் அணையின் நீர்தேக்க கரைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.
தேக்கடி ஏரிக்கரையிலே இந்தப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்ததால் நீர்வளத் துறையினர் முதற்கட்டமாக இந்தப் படகுகளை பராமரிக்க முடிவு செய்துள்ளனர்.
பின்பு ஊழியர்களின் பயன்பாட்டுக்கு இந்த விசைப் படகுகள் கொண்டுவரப்படும். அதனைத் தொடர்ந்து உரிய அனுமதி பெற்று சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படும் என்று வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் ஆகியோர் தெரிவித்தனர். ஒவ்வொரு படகிலும் தலா 20 சுற்றுலாப் பயணிகள் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.