சுற்றுலா

அசாம் சுற்றுலா: நதிக்கரைத் தீவின் அழகு

யாதும் ஊரே யாவரும் கேளிர்

மலையப்பன் நாகலிங்கம்

“தொடர்ச்சியாக வெளிநாட்டுச் சுற்றுலாவை பற்றியே எழுதறீங்க. அப்பப்போ நம்மூர் பக்கமும் வாங்க...” என்று கேட்பவர்களுக்காக இதோ அசாம்! இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்கள், வடகிழக்கு மாநிலங்களிலும் அதிகமாக உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

அவற்றில் அனைவரும் நன்கு அறிந்தது அசாம். ‘என்ன சார், காசிரங்காவில் காண்டாமிருகம் பார்க்கச் சொல்ல போகிறீர்களா?’ என்று கேட்பவர்களுக்காக, காசிரங்காவை விட்டுவிட்டு மற்ற இடங்களைச் சுற்றுவோம்.

நதிக்கரை தீவு

அசாம் சுற்றுலா செல்​வோர் நிறைய பேர் மிஸ் பண்ணும் இடமாக இருப்​பது, மஜுலி. அசாமின் பிரம்​மபுத்​திரா ஆற்றின் நடுவில் அமைந்​திருக்​கும் மஜுலி, உலகின் மிகப்​பெரிய நன்னீர் மற்றும் நதிக்கரை தீவு என்று அழைக்​கப்​படு​கிறது. ஆசியா​வின் மிகப்​பெரிய நதித் தீவு என்கிறார்கள் இதை.

குவஹாத்​தி​யில் இருந்து மஜுலியை அடைய, நாம் முதலில் ஜோர்ஹட் நகருக்​குச் செல்ல வேண்​டும். இது குவஹாத்​தி​யில் இருந்து சுமார் 350 கி.மீ தூரம் என்றாலும் பயணக்​களைப்பே தெரி​யாது. இவை தவிர, ரயில் மற்றும் விமான பயணத்​தின் மூலமாக​வும் ஜோர்​ஹாட்டை அடைய​லாம்.

பிறகு நீங்கள் இறங்குமிடத்​திலிருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோ மூலமாக நிமதி ஹாட் சென்று அங்கிருந்து படகுப்​பயணம். மஜூலி சென்​றடைய சுமார் இரண்டு மணி நேரம் ஆகும்.

சற்றே வித்​தி​யாசமான நிறத்​தில் சுழித்துக் கொண்டு ஓடும் பிரம்​மபுத்​திரா நதியில் நம் படகு பயணம் மஜுலியை நோக்கி துவங்கு​கிறது. படகில் நம் கூடவே கார், பைக், ஆட்டுக்​குட்டி போன்ற​வற்​றை​யும் பயணிக்​கின்றன.

எனவே, இது மனிதர்கள் கம் கார்கோ படகு என்று சொல்​லலாம். ஒரு வழியாய் மஜுலியை வந்தடைந்​தவுடன் உங்கள் தங்குமிடத்​தில் சற்றே இளைப்​பாரி பிறகு தீவை சுற்றத் துவங்குங்​கள்.

வைஷ்ணவ கலாச்சார மையம்

மஜூலி... அசாமிய வைஷ்ணவ கலாச்​சா​ரத்​தின் மையம் மற்றும் பிறப்​பிடம் என சொல்​லப்​படு​கிறது. இங்கே பள்ளி குழந்தை​களில் இருந்து, டீகடைக்​காரர் வரை யாரைப் பார்த்​தா​லும் பஞ்சகச்சமே ஆடை.

திரும்பிய திசை எல்லாம் நீங்கள் வைஷ்ணவம் உணர்​வீர்கள் இங்கே! துளசிச் செடி பார்த்திருப்​பீர்​கள். இங்கே துளசி மரத்தைப் பார்க்​கலாம். இங்கு பல வைஷ்ணவம் போதிக்​கும் மடங்​கள், பள்ளி​கள், மற்றும் எக்கச்​சக்க அறைகளைக் கொண்ட சட்ராஸ்(சத்​திரம்​)கள் உள்ளன. அனைத்​தும் அப்படியே பழமை மாறாமல் இன்றும் வைஷ்ணவம் போதிக்​கின்றன.

அப்படியே மலர்கள் அடர்ந்த இந்தத் தீவைச் சுற்றி வரும் போது இங்கே வாழும் மிஷ்ஷிங் பழங்குடி​யினரின் அழகான ஓட்டு வீடு​களை​யும், நீங்கள் கேட்டுக் கொண்​டால் உங்களுக்காக அவர்கள் ஆடும் அழகான நடனத்தையும் கண்டு ரசிக்க முடி​யும்.

முகமூடிகள்

மஜூலி​யின் மற்றொரு சிறப்பு, முகமூடிகள். பல நூறு வருடங்கள் பழமையான முகமூடிகளை இன்றும் பாது​காத்து வைத்​திருக்​கிறார்​கள். இந்த முகங்கள் பெரும்​பாலும் ராமாயணம் போன்ற இதிகாச கதாபாத்​திரங்​கள்.

ஆனால் எப்போது செய்​தார்​களோ, எப்படி பாது​காக்​கிறார்​களோ? இந்த முகமூடி கதாபாத்​திரங்கள் ஒவ்வொன்​றி​லும் அப்படி ஒரு தத்ரூபம் தெரி​கின்றன. மிகச் சிறப்பான தங்குமிடங்கள் இங்கே இல்லை என்றாலும் ஓர் இரவாது மஜுலி​யில் தங்குதல் நன்று.

தற்போது நிறைய சுற்றுலா பயணிகளை கவரும் மஜூலி, உள்ளூர் மக்களின் சிறந்த கைவினைப் பொருட்​களுக்​கும் புகழ்​பெற்றது என்பதை மறந்து விடாதீர்​கள். மஜுலி உங்கள் மனதை நிறைத்​திருக்​கும் அதே வேளை​யில் நீங்கள் அடுத்​ததாக சென்​றடைய வேண்டிய இடம் காமாக்யா.

காமாக்யா

காமாக்​யா​வுக்​குச் செல்​லாமல் உங்கள் அசாம் பயணம் முழுமை பெறாது. குவஹாத்​தி​யில் இருந்து சுமார் 12 கி.மீ தொலை​வில் நீலாச்சல் என்று அழைக்​கப்​படும் சிறிய குன்​றின் மேல் அமைந்​திருக்​கிறது காமாக்யா.

சிவபெரு​மானின் மனைவியான தாட்​சா​யிணி, அவரது தந்தை நடத்திய யாகத்​தில் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்க முடி​யாமல் யாக குண்​டத்​தில் உயிரை மாய்த்​துக் கொள்​கிறார். அந்த உடலை சுமந்து கொண்டு சிவபெரு​மான் ருத்​ர​தாண்​டவம் ஆடிய​போது தேவி​யின் உடல் பாகங்கள் சிதறிய இடங்​களில் ஒன்று காமாக்யா.

இக்கோயி​லின் கருவறை​யில் தேவி​யின் உருவம் இல்லை. ஒரு குகைக்​குள் இயற்​கை​யாகவே அமைந்துள்ள ‘யோனி’ அதாவது பெண் பிறப்பு​றுப்பு வடிவமே இங்கே வழிபாடு. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்​தில் தேவிக்கு மாதவி​டாய் ஏற்படு​வ​தாக, நம்பப்​படு​வ​தால் அப்போது மூன்று நாட்கள் கோயில் நடை சாத்​தப்​படு​கிறது.

இந்த மூன்று நாட்​களில் அருகே உள்ள பிரம்​மபுத்​திரா நதியின் நிறம் சிவப்பாக மாறு​வதாக நம்புவோரும் உண்டு. காமாக்​கி​யா​வின் வழிபாட்​டில் தேவி​யின் “யோனி” இருப்​ப​தால் இக்கோயி​லின் கருவறை குறித்த புகைப்​படங்கள் எதுவும் கிடைப்​ப​தில்லை.

சுவல்குச்சி

சரி, அசாமின் இரண்டு முக்​கியமான இடங்களைப் பார்த்​தா​யிற்று. அடுத்​ததாக சுவல்​குச்சி. தலைநகர் குவஹாத்​தி​யில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்​தில் இருக்​கிறது சுவல் குச்சி. இது ஒரு சிறிய கிராமம் என்றாலும் இதுதான் அசாமின் ஜவுளி உற்பத்​தி​யில் முதலிடம் பெறுகிறது. தென்னிந்தியா​வில் எப்படி கோவைக்கு மான்​செஸ்டர் என்ற பெயர் உள்ளதோ அதேபோன்று வடபகு​தி​யின் மான்​செஸ்டர் என்று சுவல் குச்சி அழைக்​கப்​படு​கிறது.

இங்கே குறுகிய தெரு​க்களில் அமைந்​திருக்​கும் ஒவ்வொரு வீடும், புடவை நெய்​யும் ஃபேக்டரி என சொல்​லலாம். இந்த நெசவாளர்கள் உருவாக்​கும் மூகா மற்றும் பாட் ஆகிய பட்டு​கள், உலகில் வேறு எங்கும் செய்​யப்​படு​வ​தில்லை. அதற்காக சுவல்​குச்சி வெறும் நெசவாளர் கிராமம் என்று நினைத்து விடாதீர்​கள்.

மூங்​கில் தோய்ந்த கூரை வீடு​கள், பசுமை செறிந்த இயற்கை நீர் வளம் என இதுவும் தற்போது ஒரு சுற்றுலா தலமாக மாறி வருகிறது. சிறிய சிறிய பட்ஜெட் ஹோட்​டல்​களும், உள்ளூர் உணவைச் சுவைக்க வழி வகிக்கின்றன. பட்டுப்புடவை நெய்​யும் இடம் மட்டும்​தானா? என்று கேட்​பவர்​களுக்கு, ஏராளமான புடவைக் கடைகளும் இங்கே உண்டு, ஏமாற்று வேலை இல்லை.

எப்படி ஒரிஜினல் எனக் கண்டு​பிடிப்பது என்று கடைக்​காரரிடம் கேட்​டால்​,ஒரு புடவையை நம் கையில் கொடுத்து, பொசுக்​கென்று அதன் அடிப்​பகு​தி​யில் நெருப்பை பற்ற வைத்து எப்படி ஒரிஜினலை கண்டு​பிடிக்​கலாம் என்று சொல்​லித் தருகிறார்​கள்.

“பட்டுப் புடவைனா ரொம்ப காஸ்ட்​லியா இருக்​குமே?” என்று யோசிப்​பவர்​களுக்கு, உங்கள் பர்ஸ் அல்லது உங்கள் கணவரின் பர்சுக்கு ஏற்ற விலை​யிலேயே இங்கே புடவைகள் கிடைக்​கின்றன. மேலும் கடைக்​காரர்​களிடம் கேட்​பீர்​களே​யா​னால், புடவை செய்​யும் இடத்​துக்கே உங்களை அழைத்து சென்​றும் காண்​பிக்​கிறார்​கள்.

கருப்பு தேயிலை

அசாம்னா டீ இல்லாமலா? என்று கேட்​பவர்​களுக்கு, அசாமின் தேயிலைத் தோட்​டங்கள் உங்கள் பயணத்தை வேறொரு சுவாரசி​யத்​துக்கு எடுத்​துச் செல்​லும். அசாமில் நிறைய தேயிலைத் தோட்​டங்கள் இருந்​தா​லும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிடத்​தோடு கூடிய தோட்​டங்​களுக்கே செல்​கிறார்​கள். காரணம், கண்ணுக்​கெட்டிய தூரம் வரை கவிழ்ந்து நிறைந்து கிடக்​கும் பசுமை.

இந்தியா​வின் வடகிழக்கு மாநிலங்​களில் மட்டுமே கிடைக்​கும் கருப்பு தேயிலை, அசாமில் நிறைய விளை​கிறது. அசாமின் தேயிலைத் தோட்​டங்​களுக்கு நடுவே நீங்கள் தங்கு​வதற்கு மற்றுமொரு காரணம் இங்கே அமைந்துள்ள காலனித்துவ அடையாளமாகத் திகழும் பங்களாக்​கள். ஆங்கிலேயர்கள் காலத்து வீடுகளை நினை​வுக்கு கொண்டு வரும்.

இந்தப் பங்களாக்​களில் ஒரு முறையேனும் கட்டாயம் தங்கி அனுப​வித்தல் சுகம். இங்கே தேயிலைத் தோட்​டங்​களைச் சுற்றிப் பார்க்​க​வும், தேநீர் சுவையை அனுபவிக்​க​வும், உள்ளூர் மற்றும் பிற உணவு வகைகளை ருசி​பார்க்​க​வும் உங்களுக்கு அதிகம் நேரம் தேவைப்​படும்.

தேயிலைத் தோட்ட சுற்றுலாவை அசாம் அரசு அதிகம் ஊக்கு​விக்​கிறது. இதில் மிகப் பிரபலமாக சுமார் 12 தேயிலைத் தோட்​டங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் சிறப்பு என்னவென்​றால் ஒவ்​வொரு தேயிலைத் தோட்​டத்​துக்​கும் ஒரு தேநீர் கலாச்​சா​ரம் மற்றும் வரலாறு இருக்​கிறது.

அசாம் வடகிழக்கு மாநிலங்​களின் சிறந்த அடை​யாளம். வனவிலங்கு​கள், தேயிலை தோட்​டங்​கள், பிரம்​மபுத்​திரா, காமாக்யா, மஜூலி என்று இன்னும் சொல்​லிக் கொள்ள நிறையவே நிறைந்​திருக்​கிறது இங்கு!

- malaipa@yahoo.in

SCROLL FOR NEXT