திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி சுற்றுலாத் துறை சார்பில் இன்று (ஜூன் 1) படகு அலங்கார போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மே 26-ம் தேதி தொடங்கி கோடை விழா நடைபெற்று வருகிறது. கோடை விழாவையொட்டி தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 7-வது நாளான இன்று சுற்றுலாத் துறை சார்பில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய்த்துறை, தோட்டக்கலைத் துறை, மீன் வளத்துறை, சுற்றுலாத் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட அரசு துறைகளின் சார்பில் படகுகள் பங்கேற்றன. படகுகள் அலங்கார அணி வகுப்பு மற்றும் போட்டியை கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா ஆகியோர் தொடங்கி வைத்தனர். சுற்றுலா அலுவலர் சுதா, தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட படகில் கிராம சாலை திட்டம், காலை உணவு திட்டம், குடிநீர், அனைவருக்கும் வீடு உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தோட்டக்கலை சார்பில் கார்னேசன் மலர்களால் ஸ்பைடர் மேன், சுற்றுலாத் துறை சார்பில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு காளை, மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கான திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
படகு அலங்கார போட்டியில் ஊராட்சி ஒன்றியம் முதல் பரிசும், சுற்றுலாத்துறை இரண்டாம் பரிசும், தோட்டக்கலைத்துறை மூன்றாம் பரிசும் பெற்றன. ஏரியில் வலம் வந்த படகு அலங்கார அணி வகுப்பை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். நாளையுடன் (ஜூன் 2) கோடை விழா நிறைவடைகிறது.