தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் அடிக்கடி சாரல் மழை பெய்யும். இதனால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
வழக்கமாக மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தாலும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஆனால் சாரல் சீஸனில் அருவிகளில் விழும் நீர் சுற்றுலாப் பயணிகளை குதூகலப்படுத்தும். மலையில் தவழ்ந்து வரும் மேகக் கூட்டம், அடிக்கடி பெய்யும் சாரல் மழை, இதமான தென்றல் காற்று ஆகியவற்றை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் இளைஞர்கள், பெரியவர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். சிற்றருவி, புலியருவி ஆகியவை சிறுவர்கள் குளிப்பதற்கு ஏற்ற இடமாக இருப்பதால் குழந்தைகளுடன் இந்த அருவிகளுக்கு ஏராளமான மக்கள் செல்வது உண்டு.
இந்த ஆண்டு கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் மழை பெய்ய தொடங்கியதும் தென்காசி மாவட்டத்திலும் சாரல் மழை களைகட்டும். சாரல் மழையை எதிர்பார்த்து குற்றாலத்தில் வியாபாரிகள் கடைகளை தயார்படுத்தி வருகின்றனர்.
தற்போது குற்றாலம் அருவிகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று வேகமாக வீசுகிறது. விரைவில் குற்றாலத்தில் சாரல் களைகட்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென்காசி புதிய மாவட்டமாக உதயமானதற்கு பின்பு கடந்த ஆண்டு சாரல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டும் சாரல் விழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.