சுற்றுலா

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கிய பழக் கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த 12 டன் மெகா அன்னாசி பழம்

செய்திப்பிரிவு

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சியில் 12 டன் எடையிலானமெகா அன்னாசி பழம், 3 டன்பழங்களால் வடிவமைக்கப்பட்டிருந்த பழக்கூடை, மலபார் அணில், பிரமிட், மண்புழு ஆகிய உருவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

கோடை சீசனை கொண்டாட நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர, தோட்டக்கலைத் துறை சார்பில் ஆண்டுதோறும் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவியப் பொருட்கள் கண்காட்சி, மலர்‌ கண்காட்சி, பழக் கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்படும்.

அதன்படி, இந்த ஆண்டு கோடை சீசனின் நிறைவு விழாவான 63-வது பழக் கண்காட்சி, குன்னூர்‌ சிம்ஸ் பூங்காவில் நேற்று தொடங்கியது. நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆகியோர் முன்னிலையில், சுற்றுலா துறை அமைச்சர்‌ கா.ராமச் சந்திரன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட பழங்களின்‌ வளங்களை பறைசாற்றும்‌ விதமாக, பல்வேறு திடல்கள்‌ அமைக்கப்பட்டு அனைத்து வித பழ வகைகள்‌ காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக, சுமார்‌ 12 டன்‌ அன்னாசி பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அன்னாசி பழம்‌ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும், குழந்தைகள்‌ உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், பல்வேறு வகையான பழங்களை கொண்டு பழக்கூடை, பிரமிட், மண்புழு, தமிழ்நாடு அரசின்‌ ‘மீண்டும்‌ மஞ்சப்பை’ திட்டத்தை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ மஞ்சப்பை, உதகை 200 ஆண்டுகள் நிறைவு வடிவங்களும்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குன்னூர், மஞ்சூர் பகுதிகளிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் அத்திப் பழங்கள் கொத்து கொத்தாக விளைந்துள்ளன. ‘பைகஸ் கேரிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட அத்திப் பழம் ஆஸ்திரேலியா, மலேசியாவை அடுத்து இந்தியாவில் அதிக அளவில் விளைகிறது. மருத்துவ குணமிக்க அத்திப் பழங்களும், பழக் கண்காட்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகள்‌ குதூகலிக்கும்‌ விதமாக, தோட்டக்கலைத் துறை மூலமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும்‌ நடத்தப்பட்டு வருகின்றன. 

SCROLL FOR NEXT