சுற்றுலா

கொடைக்கானல் கோடை விழா: 60-வது மலர் கண்காட்சியில் வசீகரிக்கும் மலர்கள், காய்கறி சிற்பங்கள்

ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கோடை விழா மற்றும் 60-வது மலர்க் கண்காட்சி இன்று (மே 26) காலை தொடங்கியது. மலர்க் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மலர்கள், மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த உருவங்கள், காய்கறி சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

சர்வதேச சுற்றுலா நகரமான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளைக் கவர கோடை சீசனில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நடத்தப்படும். இதில் மலர்க் கண்காட்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர்.

இந்த ஆண்டுக்கான கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி இன்று காலை தொடங்கியது. இவ்விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை வகித்தார். தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி வரவேற்றார். கோடை விழாவை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமியும், மலர்க் கண்காட்சியை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.

பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனும், கண்காட்சி அரங்குகளை உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணியும் தொடங்கி வைத்தனர். மலர்க் கண்காட்சியை முன்னிட்டு நடவு செய்யப்பட்ட பிளாக்ஸ், சால்வியா, கேலெண்டுலா, டேலியா,நெதர்லாந்து லில்லியம், பேன்ஸி, பிங்க் அஸ்டர் உட்பட 15 வகையான ஒரு லட்சம் மலர் செடிகளில் பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக்குக் குலுங்குகின்றன.

ஒட்டகசிவிங்கி, டெடி பியர், ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை, சிறுதானியங்கள், வாத்து ஆகிய உருவங்கள் ஆயிரக்கணக்கான கார்னேசன் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. காட்டு மாடு, வரிக்குதிரை, ஐ லவ் கோடை, டோரா கார்டூன் ஆகிய சிற்பங்கள் பல்வேறு காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன. மேலும் பூங்காவின் ஒரு பகுதியில் பல்வேறு துறை சார்ந்த அரங்குகள், பூந்தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்ச் செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மலர்க் கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் பல வண்ண மலர்களை கண்டு ரசித்ததோடு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் இரா.பிருந்தா தேவி, ப.வேலுச்சாமி எம்பி, எம்எல்ஏக்கள் செந்தில்குமார், காந்தி ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவையொட்டி பரதம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மலர் கண்காட்சி முதல் நாளான நேற்று பிரையன்ட் பூங்கா சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தது. மலர் கண்காட்சி மே 28-ம் தேதி வரையும், கோடை விழா ஜூன் 2-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT