ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி நேற்று நடந்த ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் பங்கேற்ற குழந்தைகள். 
சுற்றுலா

ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த கொழு கொழு குழந்தைகள் போட்டி

செய்திப்பிரிவு

சேலம்: ஏற்காட்டில் 46-வது கோடை விழா மலர் கண்காட்சி கடந்த 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட படகு, டிராகன், தேனீ, சோட்டா பீம் உள்ளிட்ட மலர்சிற்பங்கள், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது.

இதேபோல், ஏற்காடு ஏரியில் அமைக்கப்பட்டுள்ள லேசர் ஷோ, மரங்களில் அமைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகள் அனைத்தும் இரவு நேரத்தில் ஏற்காட்டை ஜொலிஜொலிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏற்காட்டில் தினமும் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் என பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக, ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் மகளிர் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் துறை சார்பில், ஆரோக்கிய குழந்தைகள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில், ஒன்றரை வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் உயரம், எடை, செயல்பாடுகள், ஆரோக்கியம் உள்ளிட்டவை அடிப்படையில் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கொழுகொழு குழந்தை பரிசு வழங்கப்பட்டது. மேலும், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நடனம், பாட்டுப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு, அவர்களில் சிறப்பானவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை, அவர்களது பெற்றோர் பங்கேற்க வைத்து மகிழ்ச்சியடைந்தனர்.

விழாவில் இன்று (26-ம் தேதி) பெண்களுக்கான கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம், ஆண்களுக்கான சிலம்பம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. கோடை விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான நாய்கள் மற்றும் வீட்டு விலங்குகள் கண்காட்சி நாளை (27-ம் தேதி) நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT