ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அண்ணா பூங்காவில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள். 
சுற்றுலா

ஏற்காடு கோடை விழா, மலர்க் கண்காட்சி: விளையாட்டுப் போட்டிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

செய்திப்பிரிவு

சேலம்: ஏற்காடு கோடை விழா மலர்க் கண்காட்சியை முன்னிட்டு நேற்று நடந்த விளையாட்டுப் போட்டிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சி கடந்த 21-ம் தேதி முதல் நடந்து வருகிறது. மலர்க் கண்காட்சியைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்களையும், காய்கறிகள் பழங்களால் உருவாக்கப்பட்ட காந்தி கண்ணாடி, எறும்பின் உருவம், மேட்டூர் அணை, முயல் உருவம், புலி, செல்ஃபி பாயின்ட் உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோல குடும்பத்துடன் படகு சவாரி செய்து ஏரியின் அழகை கண்டு ரசித்தனர். மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பகோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, கூட்டம் அலைமோதியது.

ஏற்காடு கோடை விழாவில் தினம் தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன்படி, நேற்று ஏற்காடு டவுன் பேசன் ஷோ மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், அரசு ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, பரிசு, கோப்பை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதேபோல, ஏற்காடு கலையரங்கத்தில் கரகம், மான், மயில், காவடியாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சியும், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், தாரை, தப்பட்டை நிகழ்ச்சிகளும் நடந்தன.

ஏற்காடுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு விளையும் பலாப்பழம், பச்சை மிளகு, காய்ந்த மிளகு, காப்பிக் கொட்டை, காபி தூள், ஆட்டுக்கால் கிழங்கு, ஆரஞ்சு பழம், கொய்யா, அத்தி, முள் சீத்தா, பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை ஆர்வமாக வாங்கினர். ஏற்காடு கோடை விழாவில் தினம் தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், சாலையோர கடைகளில் விற்பனை களைக்கட்டியுள்ளது.

சூழலியல் சுற்றுலா சேவை: ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சுற்றுலாத் துறை சார்பில் ‘ஏற்காடு சூழலியல் சுற்றுலா’ சொகுசு வாகனச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தினமும் காலை 9 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுற்றுலா வாகனம் புறப்பட்டு, சேலம் ரயில் நிலையம், 5 ரோடு, அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு சென்றடைகிறது.

ஏற்காடு ஏரி, சேர்வராயன் காட்சிமுனை, இந்திய தாவரவியல் ஆய்வகம், பீக்கு பூங்கா, பகோடா பாய்ண்ட், லேடீஸ் சீட், பட்டுப்புழு வளர்ப்புத்துறை, ரோஜா தோட்டம் மற்றும் அண்ணா பூங்கா சுற்றுலாப் பகுதிகளுக்கு நுழைவுக் கட்டணத்துடன், பயணிகளுக்கு கட்டணமாக (குளிர்சாதன வசதியில்லாமல்) ரூ.860, (காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலையில் தேநீர் மற்றும் தின்பண்டங்கள்) வழங்கப்படுகிறது.

அதேபோல, குளிர்சாதன வசதியுடன் ரூ.960 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லை. மாலை 6 மணிக்கு ஏற்காட்டிலிருந்து புறப்பட்டு, சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு சூழலியல் சுற்றுலா வாகனம் வந்தடையும். சுற்றுலாப் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, சுற்றுலா துறை கேட்டுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT