சுற்றுலா

கோடை விடுமுறை | வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் - ஆயிரக்கணக்கானோர் கடலில் நீராடினர்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: கோடை விடுமுறையை முன்னிட்டுஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைபேராலயத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குவிந்துள்ளனர்.

சிலுவை பாதையில் மண்டியிட்டு சென்று பழையமாதா ஆலயத்தில் பிரார்த்தனைசெய்தனர். தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பேராலய வளாகத்தில் மெழுகுவத்தி ஏற்றி, மாதாவுக்கு மாலை அணிவித்தும், தென்னங்கன்றுகளை காணிக்கையாக செலுத்தியும் பிரார்த்தனை செய்தனர்.

பின்னர், பேராலயத்தில் நடைபெற்ற கோடைகால சிறப்பு திருப்பலியிலும் கலந்துகொண்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரார்த்தனை செய்த பக்தர்கள் வெயிலின் தாக்கத்தை தணித்துக்கொள்ள கடலில் குடும்பத்தினருடன் உற்சாகமாக நீராடினர்.

SCROLL FOR NEXT