உதகை தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு உதகையில் ரோஜா பூங்காவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். உதகை ரோஜா பூங்காவும் நகரின் மத்திய பகுதியிலேயே அமைந்துள்ளது. இந்த நூற்றாண்டு ரோஜா பூங்காவில், 4 ஆயிரம் ரோஜா வகைகள் உள்ளன.
சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. ஆண்டு தோறும் இங்கு மே மாதம் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ரோஜா பூங்காவில், எங்கும் காண முடியாத நீலம், ஊதா, பச்சை நிறங்களை கொண்ட ரோஜா மலர்களும், ஹைபிரிட் ரோஜாக்கள், மினியேச்சர் ரோஜாக்கள் போன்ற வகைகளை சேர்ந்த ரோஜா மலர்கள் அதிகளவு நடவு செய்யப்பட்டுள்ளன.
இது தவிர, உதகை படகு இல்லம் எதிரே மரவியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா புதிதாக உருவாக்கப்பட்டாலும், இங்கு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க பல வகை மரங்கள் உள்ளன. ரோஜா பூங்கா மற்றும் மரவியல் பூங்காவிற்கு உதகை மத்திய பேருந்து நிலையம், ஏ.டி.சி., மற்றும் சேரிங்கிராஸ் போன்ற பகுதிகளில் இருந்து எளிதாக ஆட்டோக்களின் மூலம் செல்லலாம்.
சிம்ஸ் பூங்கா: குன்னூர் சிம்ஸ் பூங்காவில், பல வகை மரங்கள், மலர் செடிகள், சிறிய படகு இல்லம் ஆகியன உள்ளன. இந்த பூங்காவில் உள்ள ருத்ராட்ச மரம் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், இந்த பூங்காவில் உள்ள குறிஞ்சி மலர்கள், காட்டு சூரியகாந்தி பூ செடிகள் ஆகியவை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன. இந்த பூங்காவில் கோடை விழாவின் போது, பழக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துக் கொள்வது வழக்கம். 9 மணி முதல் மாலை 6 மணி வரை படகு சவாரி செய்யலாம்.