சேலம்: ஏற்காட்டில், கோடை விழா தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள ஏரிப்பூங்காவில், ஏற்காடு ஏரியின் அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க வசதியாக, ரூ.10 லட்சம் செலவில் புதியதாக காட்சிக் குடில் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள முக்கிய கோடை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான, ஏற்காட்டில், கோடை காலத்தில் ஆண்டுதோறும் கோடை விழா மலர்க் கண்காட்சி நடத்தப் படுகிறது.
அதன்படி, நடப்பாண்டு ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சி வரும் 21-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை 8 நாட்களுக்கு நடை பெறவுள்ளது.
கோடை விழாவையொட்டி, ஏற்காடு அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் மலர்க்கண்காட்சியில் 5 லட்சம் மலர்களைக் கொண்டு, பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிராகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்பட பல்வேறு மலர்ச்சிற்பங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கோவிந்தராஜ் கூறியது: மலர் சிற்பங்கள் அமைப்பதற்கு அடிப்படையான, இரும்புச் சட்டங் களில், சிற்ப வடிவில் தயார் செய்யப்பட்டுவிட்டது. இவற்றின் மீது மலர்களை அடுக்கி, மலர் சிற்பங்களுக்கு, முழுவடிவம் கொடுக்கப்படும். இதற்காக, கார்னேஷன், ஜெர்பைரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட வகை மலர்கள் ஓசூர், பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன.
அண்ணா பூங்கா மற்றும் ஏரிப்பூங்கா வளாகத்தில் மலர்களைக் கொண்டு, மகாத்மா காந்தி கண்ணாடி மற்றும் பேருந்தின் பக்கவாட்டு வடிவம் ஆகிய செல்ஃபி பாயின்ட்டுகள் அமைக்கப்படுகின்றன. பேருந்தின் ஜன்னலில் எட்டி பார்ப்பது போல, சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ முடியும்.
ஏரிப்பூங்காவின் ஒரு பகுதியில் இருந்து, ஏற்காடு ஏரியின் முழு பரப்பளவையும் அழகுடன் காண முடியும். எனவே, அந்த இடத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.10 லட்சம் செலவில், கேரளா மாநில வீடுகளின் மேற்கூரை வடிவமைப்புடன் கூடிய, காட்சிக்குடில் கட்டப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் சுமார் 30 பேர் அமர்ந்து, தென்றல் காற்றினை அனுபவித்தபடி, ஏற்காடு ஏரியின் அழகை கண்டு ரசிக்க முடியும்.
கோடை விழாவை கண்டு களிக்க, கார்கள், வேன்கள் உள்ளிட்டவற்றில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். எனவே, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த வசதியாக, அண்ணா பூங்கா அருகே உள்ள தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான திடலில், முதல் முறையாக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது. இங்கு சுமார் 300 வாகனங்களை நிறுத்த முடியும். இந்த இடத்தின் அருகே தோட்டக்கலைத்துறை அங்காடியும் அமைக்கப்படுகிறது, என்றார்.
காட்சிக்குடிலுக்குள் சுமார் 30 பேர் அமர்ந்து, தென்றல் காற்றினை அனுபவித்தபடி, ஏற்காடு ஏரியின் அழகை கண்டு ரசிக்க முடியும்.