திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. இந்த மலையில் ஆண்டு தோறும் அரசு சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வந்தாலும் ஏலகிரி மலையில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் குறைவாகவே இருப்பதாகவும், சிறுவர் பூங்கா, படகு குழாம் போன்ற இடங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாக சுற்றலாப் பயணிகள் குற்றஞ் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த தமிழ்ச் செல்வன் என்பவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘ஏலகிரி மலையில் அத்தனாவூர் பகுதியில் படகு இல்லம் உள்ளது. இதையொட்டி குழந்தைகளுக்கான பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழும் விளை யாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
பெரியவர்களுக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கும் பூங்கா நிர்வாகம் அதை முறையாக பராமரிக்கவில்லை. எங்கு பார்த்தாலும் குப்பை கழிவுகள் குவிந்துள்ளன. பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைகளில் காலி மதுபாட்டில்கள், வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், உணவுக்கழிவுகள் வீசப்பட்டு சுகாதாரச் சீர்கேட்டுடன் ஏலகிரி மலை காணப்படுகிறது. இங்கு தண்ணீர் வசதி கூட இல்லை.
தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு விற்பனை செய்யப்படும் தண்ணீர் முதல் குளிர்பானம் வரை இரட்டிப்பு விலை உள்ளது. பிஸ்கெட், ரொட்டி, பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
காலாவதியான உணவுப் பொருட்கள், பல தடவை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யில் செய்யப்பட்ட பலகாரங்கள் விற்பனை செய்யப்படுவதால் மலைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே, சுற்றுலா வரும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துதர முன்வர வேண்டும்’’ என்றார்.