கொடைக்கானல்: கொடைக்கானலில் லேசான சாரல், தவழும் மேகக் கூட்டங்கள், பூங்காவில் பூத்துக் குலுங்கும் ஆயிரக்கணக்கான மலர்கள் என காலநிலை அருமையாக உள்ளதால் விடுமுறை நாளான நேற்று குடும்பம், குடும்பமாக சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.
கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கும் முன்பே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தினமும் அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாளான நேற்று காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக கொடைக்கானலில் வாகனங்களில் குவிந்தனர்.
இதனால் சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கொடைக்கானல் மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட், தூண் பாறை, வெள்ளி நீர்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, குணா குகை, பாம்பார் அருவி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
படகுக் குழாமில் நீண்ட நேரம் காத்திருந்து ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியைச் சுற்றி குதிரை சவாரி மற்றும் சைக்கிளிங் சென்றும் மகிழ்ந்தனர்.
கொடைக்கானலில் நிலவிய குளுமையான சூழல், அவ்வப்போது லேசான சாரல், தரையிறங்கித் தவழும் மேகக் கூட்டங்கள், பிரையன்ட் பூங்கா மற்றும் ரோஸ் கார்டனில் பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் என சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொன்றையும் வெகுவாக ரசித்தனர்.
இதற்கிடையே, வட்டக்கானல் அருகேயுள்ள டால்பின் நோஸ் பகுதிக்கு வாகனங்களில் சென்று வருவதற்கான வசதியை ஏற்படுத்திதர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.