அமைச்சர் கா.ராமச்சந்திரன் | கோப்புப் படம் 
சுற்றுலா

கோடநாட்டில் 4 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படும்: சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

கோத்தகிரி: கோடநாடு காட்சிமுனை பகுதியில் 4 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறிகள் கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை தொடங்கி வைத்தபின் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது: இயற்கை காய்கறிகள் மற்றும் சிறு தானிய வகைகளுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சிறு தானிய சாகுபடிக்கு ரூ.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உடல் நலனை காக்க அரசு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மைக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும். சிறு தானியங்களை ஊடுபயிராக பயிரிட்டு, வருவாய் ஈட்டலாம். நீலகிரி மாவட்டம் லேம்ஸ் ராக், டால்பின்ஸ் நோஸ், கோடநாடு ஆகிய சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். கோடநாடு காட்சிமுனை பகுதியில் 4 ஏக்கரில் புதிதாக பூங்கா அமைக்கப்படும்.

உதகை மந்தாடா முதல் தொட்டபெட்டா வரை ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2021-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்துக்கு 11 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், 2022-ம் ஆண்டு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர், என்றார்.

நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா பேசியதாவது: கோத்தகிரியில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக ரூ.42 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால், கோத்தகிரி பேரூராட்சி மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களும் பயன்பெறும். உதகை மார்க்கெட்டில் நெருக்கடியை தவிர்க்க ரூ.17 கோடியில் விரிவாக்கப்படவுள்ளது.

கூடலூரில் நிலவி வரும் பிரிவு 17 நிலப்பிரச்சினையை தீர்க்க சிறப்புக் குழுவை முதல்வர் அமைத்துள்ளார். இதனால், இப்பிரச்சினைக்கு விடிவு ஏற்படும். அப்பகுதியில் மின்சார இணைப்பு இல்லாத 5,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், எஸ்ஏடிபி திட்ட இயக்குநர் மோனிகா ராணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் ராம்குமார், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT