கோவை: கோவையில் பறவைகள் பூங்கா உருவாக்குவதற்காக, வஉசி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் வண்டலூருக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளன.
கோவை வஉசி உயிரியல் பூங்கா 4.35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பூங்காவில் பறவைகள், விலங்குகள், ஊர்வன என 500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தற்போது, புள்ளி மான்கள், கடமான்கள், முதலைகள், நரிகள், பாம்பு வகைகள், குரங்குகள், கிளிகள், வாத்துகள், பெலிகான் பறவைகள், மயில்கள் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையமான இந்த உயிரியல் பூங்காவுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வர். உயிரியல் பூங்காவுக்கு மத்திய வன உயிரின மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், உரிமம் வழங்கப்பட்டு இருந்தது.
பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு, அதன் இயற்கை தன்மைக்கு ஏற்ப கட்டமைப்பை உருவாக்க மத்திய வன உயிரின மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியது. இப் பணி தாமதம் ஆனதால், பூங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் கடந்த பல மாதங்களாக உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.
இப்பூங்காவை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வஉசி உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்றி அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘உயிரியல் பூங்கா வளாகத்தில் பறவைகள் மட்டும் பராமரிக்கப்பட உள்ளன.
வெளிநாட்டு வகை பறவைகளும் இங்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படும்’’ என்றனர். மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ‘‘பூங்காவில் காட்டு விலங்குகள் என வகைப்படுத்தப்பட்ட மான்கள், குரங்குகள், பாம்புகள், முதலைகள், நரிகள் உள்ளிட்டவற்றை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த விலங்குகளை பட்டியலிட்டு வண்டலூர் பூங்கா நிர்வாகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் விலங்குகள் இடமாற்றம் செய்யப்படும். அதே சமயம், வஉசி உயிரியல் பூங்காவில் 2 ஏக்கர் பரப்பளவில் தனியார், பொது மக்கள் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் ‘பறவைகள் பூங்கா’ உருவாக்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை தயாராகிவருகிறது’’என்றார்.