ஏற்காட்டில் 129 ஆண்டுகள் பழமையான, புதுப்பிக்கப்பட்ட ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த காவல் நிலைய கட்டிடத்தை, புதுப்பித்து சுற்றுலா பயணிகள் பார்வைக்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் திறந்து வைத்தார். உடன் ஊரக உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தையல் நாயகி உள்ளிட்ட போலீஸார். 
சுற்றுலா

ஏற்காட்டில் 129 ஆண்டு பழமையான காவல் நிலைய கட்டிடம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு

செய்திப்பிரிவு

சேலம்: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஏற்காட்டில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 129 ஆண்டு பழமையான காவல் நிலைய கட்டிடம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில், சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். இங்கு 1894-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், காவல் நிலையம் கட்டப்பட்டது. பழமை காரணமாக, ஏற்காடு காவல் நிலைய கட்டிடமானது, இடிந்து விழும் நிலையில் இருந்தது. எனவே, பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது.

ஆனால், ஏற்காடு மக்களும், சமூக ஆர்வலர்களும் வரலாற்று சின்னமாக கருதப்படும் ஏற்காடு காவல் நிலைய கட்டிடத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. எனவே, பழைய கட்டிடம் இடிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதனிடையே, பழைய கட்டிடத்துக்கு அருகிலேயே, காவல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இந்நிலையில், பழமையான காவல் நிலைய கட்டிடத்தை, புதுப்பிக்க மாவட்ட காவல்துறை முயற்சி மேற்கொண்டது. தற்போது, 129 ஆண்டு பழமை சிறிதும் மாறாமல், மீண்டும் கம்பீரமாக கண்முன் காட்சியளிக்கிறது ஆங்கிலேயர் கால காவல் நிலையம். இந்த கட்டிடத்துக்குள், நூற்றாண்டுக்கு முன்னர் பயன்படுத்திய பழமையான துப்பாக்கிகள், சிறை, சிறிய அளவிலான நூலகம் ஆகியவையும் இருக்கின்றன.

வரலாற்று சின்னமாக நிற்கும் இந்த காவல் நிலைய கட்டிடத்தை, சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ வசதியாக, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில், சேலம் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆங்கிலேயர் காலத்தில் இருப்பது போன்ற ஒரு காவல் நிலையத்தை, தற்போதும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், இந்த கட்டிடத்தை சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிடுவதுடன், ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்துக் கொண்டு, பழமையுடன் தங்களை இணைத்து, மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT