நாமக்கல்: கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்கு செல்ல இரும்பு பாலம் அமைக்க வேண்டும், என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் மூலிகை வளம் நிறைந்த கொல்லிமலை சுற்றுலாத் தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அரிதான இடங்கள்: பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கொல்லிமலையில் காண்பதற்கு அரிதான பல்வேறு இடங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது ஆகாய கங்கை அருவியாகும். ஏறத்தாழ 160 அடி உயரத்திலிருந்து விழும் தண்ணீரைக் கீழிருந்து பார்க்கும் போது ஆகாயத்தைப் பிளந்து கொண்டு தண்ணீர் கொட்டுவதுபோல காட்சியளிக்கும். எனவே தான் ஆகாய கங்கை அருவி என்றழைக்கப்படுகிறது.
திகிலூட்டும் இடங்கள்: வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு 1,050 படிக்கட்டுகளில் இறங்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பயணிகளுக்குப் பலவிதமான மகிழ்வூட்டும் இடங்கள் உள்ளன. மேலும், படிக்கட்டுகளில் சில இடங்களில் பெரிய பாறையின் அடியில் செல்லும்போது பயணிகளுக்கு திகிலூட்டும் அனுபவத்தை ஏற்படுத்தும்.
கீழே விழும் அபாயம்: படிக்கட்டுகளில் இறங்கிய பின்னர் அருவிக்குச் செல்ல பாறைகளின் மீதேறி செல்லும் நிலை உள்ளது. இதனால், பயணிகள் பலர் பாறைகளில் வழுக்கி கீழே விழுந்து காயமடையும் நிலையுள்ளது. எனவே, அருவிக்குச் செல்ல இரும்பு பாலம் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறியதாவது: கோடை விடுமுறை என்பதால் கொல்லிமலைக்கு வந்துள்ளோம். ஆகாய கங்கை அருவிக்கு வந்து குளித்தது புது அனுபவமாக இருந்தது. அருவிக்குச் செல்ல பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை வசதிகள் இல்லை. அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
ஆடை மாற்ற அறை: குறிப்பாக, படிக்கட்டு நிறைவடையும் பகுதியிலிருந்து அருவிக்குப் பாதுகாப்பாகச் செல்ல இரும்பு பாலம் அமைக்க வேண்டும். இதுபோல, அருவியில் பெண்கள் குளிக்க தனி இடவசதியும், தடுப்புகளும் அமைக்க வேண்டும். ஆடை மாற்றும் அறையும் கட்ட வேண்டும்.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.