சுற்றுலா

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 22-ல் தேநீர் கண்காட்சி

செய்திப்பிரிவு

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 22-ம் தேதி தேநீர் கண்காட்சி நடத்தப்படுமென தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.முத்துக்குமார் தெரிவித்தார்.

கோடை விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலக கூட்டரங்கில் தேயிலை சுற்றுலா திருவிழா 2023 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், தேயிலை வாரியசெயல் இயக்குநர் எம்.முத்துக்குமார் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக உள்ளதால் ஒவ்வோர் ஆண்டும் கோடை விழாவுக்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். நடப்பாண்டு நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தேநீர் குறித்து பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச தேயிலை தினத்தின் ஒரு பகுதியாக மே மாதம் 21-ம் தேதி தேயிலை விற்பனையாளர், வாங்குபவர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தேயிலை கலப்படத்தை தடுக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தேநீர் காய்ச்சும் போட்டி நடத்தவும், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் பிற இடங்களில் நீலகிரி மாவட்ட சிறுதேயிலை விவசாயிகள்தயாரிக்கும் சிறப்பு தேயிலை வகைகளை காட்சிப்படுத்தவும் அரங்குகள் அமைக்கப்படும். சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் மே 22-ம் தேதி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேநீர் கண்காட்சி நடத்தப்படும்.

தேயிலை உற்பத்தி குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில், தேயிலை தொழிற்சாலைகளை அவர்கள் நேரில் காணஏற்பாடு செய்யப்படும். எனவே, தேயிலை சுற்றுலா திருவிழாவை சிறப்பான முறையில் நடத்த, மாவட்ட நிர்வாகம், துறை சார்ந்த அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.

இக்கூட்டத்தில், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் மோனிகா ராணா, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) துரைசாமி, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் ஷிபிலாமேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தேயிலை வாரிய உதவி இயக்குநர் செல்வம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT