உதகை: நீலகிரி மாவட்டத்தில் விதிமீறி செயல்பட்ட 3 தங்கும் விடுதிகளுக்கு வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது வெயில் சுட்டெரிப்பதால் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்த வண்ணம் உள்ளனர். உதகை, குன்னூரில் செயல்படும் தங்கும் விடுதிகளில் முன்பதிவுசெய்து, சுற்றுலா பயணிகள் அறை எடுத்து தங்குவது வழக்கம்.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து உதகை, குன்னூர் நகராட்சிகளில் வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு, விதிமீறி தங்கும் விடுதியாக சிலர் மாற்றியுள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவின் படி, வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.
உதகை சவுத் வீக் பகுதியில் 3 விடுதிகள் அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உதகை கோட்டாட்சியர் துரைசாமி, வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள், அந்த விடுதிகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர். குன்னூரில் வட்டாட்சியர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் தீபக் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து, கன்னிமாரியம்மன் கோயில் தெரு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட 2 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
உதகை, குன்னூரில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு விதிமீறி செயல்படும் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.