புதுச்சேரி: கரோனா காலத்தில் மூடப்பட்டு, இன்னும் பொதுமக்களை அனுமதிக்காத வனத்துறை வளாகத்தில் உள்ள வனப்பகுதியை இந்த கோடை காலத்தில் மக்கள் பார்வையிட அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
புதுச்சேரியில் வன விலங்குகள் சரணாலயம் எதுவும் கிடையாது. இங்குள்ளோர் விலங்குகளைப் பார்க்க சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு சுண்ணாம்பாறு படகு குழாம், கடற்கரை சாலை, அருங்காட்சியம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில், பாரதி மற்றும் பாரதிதாசன் நினைவு இல்லங்கள் ஆகியவை சுற்றிப் பார்க்க உள்ளன.
புதுச்சேரியில் வன விலங்கு உயிரியல் பூங்கா தொடங்கினால் சுற்றுலா பயணிகளுக்கு பொழுது போக்காக அமையும். அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
கடலூர் சாலையில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் புதுச்சேரி வனத்துறை அலுவலகம் உள்ளது. இந்த பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் வனத்துறை அலுவலகமும், சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதியும் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி வனப்பகுதியை பொதுமக்கள் பார்க்க அனுமதி அளித்தார். அதன் பின்னர் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அங்கு சென்று, பார்த்து வந்தனர்.
அடர்ந்த, பழமையான மரங்களுக்கு இடையே சுமார் 3 கி.மீ. தொலைவு நடந்து இந்தவனப்பகுதியை சுற்றிப் பார்த்துவந்தனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை முதல் மாலை வரை இந்தப் பகுதி திறந்திருந்தது. கரோனா ஊரடங்கு காலத்தில் அங்கு பொதுமக்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டது. இதுவரையிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
சிறு வன உயிரியல் பூங்கா அமையுமா? - இந்த வனப்பகுதியின் அருகில் உள்ள வனத்துறை அலுவலகவளாகத்தில் வன விலங்குகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு, தற்போது 20-க்கும்மேற்பட்ட மான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் அடிப்பட்ட நிலையில் சிக்கும் பாம்புகள், குரங்கு, மயில், நரி, முள்ளம்பன்றி, வாத்து, அணில், மலைப்பாம்பு ஆகியவற்றையும் இங்குபேணி பாதுகாத்து வருகின்றனர். விலங்குகள் கருவுற்று இருந்தால் அவை குட்டி ஈணும் வரைஅங்கேயே வைத்து பாதுகாக்கின்றனர்.
ஒரு உயிரியல் பூங்காங்களில் இருப்பது போன்று இங்கு எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் விலங்குகள் மற்றும் பறவைகளை இங்கு வைத்து பராமரிக்க முடிவது இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அதனால் புதுவையில் சிறு உயிரினங்கள் வாழும் பூங்கா அமைக்க வேண்டும் என்று வனத்துறை சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
“சுதேசி மில் வளாகம் சுற்றுலாபயணிகளை கவரும் விதமாக மேம்படுத்தப்படும் , புதுச்சேரியில் சிறு வன உயிரியல் பூங்கா அமைக்கப்படும்” என்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.
எனவே புதுவை மாநிலத்தில் உள்ள மக்கள் அரசு ஏற்கெனவே அறிவித்தது போல சிறு வன உயிரியல் பூங்காவை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கெனவே அனுமதிஅளித்தது போல் வனத்துறை வளாகத்தில் உள்ள வனப்பகுதியில் சென்று பார்வையிட, மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அரசு உடனடியாக வன உயிரியல் பூங்கா அமைக்க முழு வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விரைவுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். அடர்ந்த, பழமையான மரங்களுக்கு இடையே சுமார் 3 கி.மீ. தொலைவு நடந்து வனப்பகுதியை சுற்றிப் பார்த்துவந்தனர்.