சுற்றுலா

கோவை - வெள்ளலூர் குளக்கரையில் அமைகிறது பட்டாம்பூச்சி பூங்கா

செய்திப்பிரிவு

கோவை: கோவை வெள்ளலூர் குளத்தின் கரைப் பகுதியில் பட்டாம் பூச்சி பூங்கா அமைக்கப்பட உள்ளது. வெள்ளலூரில் 90 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. இங்கு சீமைக் கருவேல மரங்களும், குப்பை கழிவுகளும் நிறைந்து காணப்பட்டன.

இதைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் மூலம் சீரமைக்கப்பட்டு, குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இக்குளக்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்கப்பட்டது.

இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், மூலிகைச் செடிகள், பட்டாம்பூச்சிகளை கவரும் பல்வேறு செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வெள்ளலூர் குளத்துக்கு பட்டாம்பூச்சிகளின் வருகையும் அதிகரித்தது. இங்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 101 வகை பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டன.

இதைத் தொடர்ந்து, வெள்ளலூர் குளத்தில் பட்டாம்பூச்சிகள் பூங்கா உருவாக்க முடிவு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பொள்ளாச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் பணியை தொடங்கி வைத்தனர். நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் டி.சுப்பிரமணியன், எம்.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறும்போது, ‘‘தமிழகததில் 327 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 101 வகையான பட்டாம்பூச்சி வகைகளை கொண்ட ‘பட்டர்பிளை ஹாட்ஸ்பாட்’ ஆக வெள்ளலூர் குளம் திகழ்கிறது.

இதை மேம்படுத்தும் வகையில் தனியார் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் திட்டத்தில் ரூ.39 லட்சம் நிதியுதவியுடன் பட்டாம்பூச்சி பூங்கா உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், வெள்ளலூர் குளக்கரையில் கடந்த ஓராண்டாக ஆவணப்படுத்தப்பட்ட பட்டாம்பூச்சிகள் குறித்த புத்தகமும் வெளியிடப்பட்டது’’ என்றார்.

SCROLL FOR NEXT