கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் சிவப்பு, இளஞ்சிவப்பு வண்ணத்தில் பூத்துள்ள ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பல்வேறுகால நிலைகளில் பூக்கும் பூச்செடிகள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள கண்ணாடி மாளிகையில் அரிய வகை கற்றாழை, தாவரங்கள் மற்றும் பிரம்ம கமல செடியும் வளர்த்து வருகின்றனர். பிரம்ம கமலம் பூவின் சிறப்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். அதுவும் நள்ளிரவில் மட்டும் பூக்கும்.
தற்போது பிரையன்ட் பூங்காவில் நேற்று முன்தினம் (ஏப்.17) நள்ளிரவில் வெவ்வேறு செடிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் பிரம்மகமல பூக்கள் பூத்துக் குலுங்கின.
இதே போல், மே மாதம் நடக்கவுள்ள 60-வது மலர் கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்டுள்ள ‘ஸ்பைடர் லில்லி’ பூச்செடிகள் வெள்ளை வண்ணத்தில் பூத்துக் குலுங்குகின்றன. இந்த பூக்களை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
இது குறித்து தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறுகையில், பிரையன்ட் பூங்காவில் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் பூக்கும் மூன்று வகையான பிரம்மகமல செடிகள் மொத்தம் 40 உள்ளன.
அவை தற்போது ஒவ்வொன்றாக பூக்கத் தொடங்கியுள்ளன. ரோஸ் கார்டனில் 10 பிரம்ம கமல செடிகளை வளர்த்து வருகிறோம். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு செடியில் அதிகபட்சம் 2 பூக்கள் மட்டுமே பூக்கும், என்றார்.