கோபியை அடுத்த கொடிவேரி தடுப்பணையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள் 
சுற்றுலா

கோபி கொடிவேரி தடுப்பணையில் சுகாதாரக் குறைபாட்டால் முகம் சுளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: ஆண்டுக்கு 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கொடிவேரி தடுப்பணையில், நிலவும் சுகாதாரக் குறைப்பாட்டைப் போக்கி, பாதுகாப்பான பரிசல் பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் நீர் கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, கொடிவேரி பாசனத்திற்கு அனுப்பப்படுகிறது. நூற்றாண்டு பழமையான கொடிவேரி அணையில் இருந்து செல்லும் நீர், அருவி போல் கொட்டுவதால், நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இப்பகுதியில் அதிக எண்ணிக்கை யிலான திரைப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதால், மாநில அளவில் பிரபலமான சுற்றுலாத் தலமாக இப்பகுதி மாறியுள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொடிவேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்கள், விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போதும், மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் போதும் இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆண்டுக்கு 25 லட்சம் பேர்: பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணைப் பகுதிக்குச் செல்ல ரூ.5 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கொடிவேரி தடுப்பணையில், பயணிகள் பாதுகாப்பாகக் குளிப்பதற்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், தடுப்பு கம்பிகள், கழிப்பறை, உடை மாற்றும் அறை, சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் அறை போன்றவை கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டன.

இந்த கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாததாலும், சுகாதார மற்ற சூழ்நிலை நிலவுவதாலும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: கொடிவேரி தடுப்பணையில் குளிக்க வருபவர்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை மற்றும் பெண்கள் உடை மாற்றும் இடம் உள்ளது.

அங்கு சுகாதாரமாக இல்லாததால், அந்த பகுதிக்குச் செல்லவே தயங்கும் நிலை உள்ளது. அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வரும் நாட்களிலாவது, அங்கு கூடுதல் தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்தி, உடனுக்குடன் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் இடம், பூங்கா பகுதியிலும் அகற்றப்படாத குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.

பாதுகாப்பற்ற பரிசல் பயணம்: பூங்காவை ஒட்டியுள்ள அணையின் பரிசல் சவாரி பகுதியில் நேற்று (16-ம் தேதி) மாடு இறந்து கிடந்ததால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. லைப் ஜாக்கெட் இல்லாமல், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் பரிசல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப் படுவதால், பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மேலும், பரிசல் கட்டணம் நிர்ணயம் செய்யப்படாததால், பரிசல் ஓட்டிகள் கேட்கும் கட்டணத்தை சுற்றுலாப் பயணிகள் கொடுக்க வேண்டியுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு: தடுப்பணை பகுதியில் விற்பனையாகும் உணவின் விலையும் அதிகமாக உள்ளது. இவற்றின் விலையை நிர்ணயம் செய்து, சுகாதாரமான உணவு விற்பனையை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், பொருட்கள் பாதுகாப்பு அறை இல்லாததால், பயணிகள் குளிக்கும் போது பாதுகாப்புடன் பொருட்களை வைத்திருக்க முடியவில்லை. வார இறுதி நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கூடுதல் போலீஸாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பரிசல் கட்டணம் நிர்ணயம் செய்யப்படாததால், பரிசல் ஓட்டிகள் கேட்கும் கட்டணத்தை சுற்றுலாப் பயணிகள் கொடுக்க வேண்டியுள்ளது.

SCROLL FOR NEXT