மேட்டுப்பாளையம்: நடப்பாண்டு கோடை சீசனை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையம் - உதகை வரையிலான கோடை கால சிறப்பு மலை ரயில் சேவை நேற்று தொடங்கியது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு இந்த ரயில் உதகை நோக்கி புறப்பட்டது. மதியம் 2.25 மணிக்கு உதகை ரயில் நிலையம் சென்றடைந்தது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த சிறப்பு மலை ரயிலில் பயணித்தனர். ரயில்வே துறையின் சார்பில் இந்த சிறப்பு ரயிலில் பயணித்த சுற்றுலாப் பயணிகளுக்கு சாக்லெட், பிஸ்கட், பழச்சாறு அடங்கிய பரிசுப்பை இலவசமாக வழங்கப்பட்டது.
அதேபோல, இந்த ரயில் மறு மார்க்கமாக ஞாயிற்றுக் கிழமை காலை 11.25 மணிக்கு உதகையில் இருந்து புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப் பாளையம் ரயில் நிலையத்தை வந்தடையும். வரும் ஜூன் 25-ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில், சனிக்கிழமைகளில் மட்டும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.