சுற்றுலா

குமரி சுற்றுலா தலங்களில் அலைமோதும் கூட்டம்: நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறைகளால் கன்னியாகுமரி சுற்றுலா தலங்களில் நேற்று கூட்டம் அலைமோதியது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அரசு விடுமுறை என்பதால் கன்னியாகுமரிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

நேற்று காலையில் இருந்தே கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் வரிசையில் காத்து நின்று ஏராளமானோர் சென்று வந்தனர்.

இதைப்போல் முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்கு அதிகமானோர் திரண்டிருந்தனர். கடற்கரை சாலை, காட்சிகோபுரம் பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.

வட்டக்கோட்டை, கோவளம், சங்குத்துறை கடற்கரை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரி கோட்டை, சிற்றாறு, களியல் உட்பட இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளுக்கும் ஏராளமானோர் சென்று வந்தனர்.

இதனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

இன்றும், நாளையும் தொடர்விடுமுறை என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாமையங்களில் மேலும் கூட்டம்அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும்மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் நிரம்பியுள்ளன.

நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களிலும் புத்தாண்டு சிறப்புபூஜைகள் நடைபெற்றதால் கன்னியாகுமரி, நாகர்கோவில், சுசீந்திரம், மண்டைக்காடு கோயில்களுக்கு செல்லும் வழித்தடங்களில் வாகனங்கள் அதிக அளவில் சென்றன.

SCROLL FOR NEXT