இலங்கை: சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இலங்கைத் தீவைச் சுற்றுலாவின் சொர்க்கமாக மாற்றும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திக் குறிப்பு: பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவித்து வரும் இலங்கைத் தீவு, அந்த பாதிப்புகளில் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலா மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி தலைநகர் கொழும்புவில் சுற்றுலாத் திருவிழா நடந்தது.
ஸ்ரீலங்கா கன்வென்ஷன் பீரோ மற்றும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைந்து, "மைஸ் எக்ஸ்போ 2023" என்ற தலைப்பில் சுற்றுலா திருவிழாவை நடத்தின. இவ்விழாவில் உலக அளவிலான சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் 100 பேர் பங்கேற்றனர். இலங்கைத் தீவுக்குள் சுற்றுலாத் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள 75 நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
சுற்றுலா வணிகம், கேளிக்கை, புவியியல் அமைவிடம், சுற்றுலாவுக்கான அடிப்படை வசதிகள், வளமான பண்டையப் பாரம்பரிய நிகழ்வுகள் என இலங்கைத் தீவைச் சுற்றுலாவின் சொர்க்கமாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விழாவுக்கு வந்திருந்த ஒவ்வொரு சுற்றுலாத் திட்ட முகவரும் சுமார் 50 சந்திப்புகளை நிகழ்த்தியுள்ளனர்.
இவ்வாறாக, திருவிழாக் காலகட்டத்தில் ஐந்தாயிரம் சுற்றுலா ஏஜென்சிகளின் சந்திப்புகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. விழாவின் துவக்க நிகழ்ச்சியில் இலங்கைத் தீவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.