நாகர்கோவில்: வார விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் பெற்றோர்களுடன் பள்ளிக் குழந்தைகள் குவிந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. மலையோரப் பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், படகு இல்லம், வட்டக்கோட்டை, உதயகிரி கோட்டை, மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி, பேச்சிப்பாறை, சிற்றாறு மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திற்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீரில் குழந்தைகள் உற்சாகமாக குளியலிட்டு மகிழ்கின்றனர். தற்போது மலையோரங்களில் மழை பெய்து வருவதால் திற்பரப்பில் வழக்கத்தைவிட தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. திற்பரப்பு அருவி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்திலும் குழந்தைகள் குளித்து மகிழ்ந்தனர்.