கொடைக்கானல்: கொடைக்கானலில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் காணப்பட்டது.
கோடைக்கு முன்பே வெயில் வாட்டி வருவதால், வெயிலை தற்காலிகமாக சமாளிக்க குளுமை நகரான கொடைக்கானலுக்கு நேற்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.
கல்விச் சுற்றுலாவாக பள்ளி மாணவ, மாணவிகளும் வந்திருந்தனர். பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். ஏரியில் படகு சவாரியும், ஏரிச் சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் முக்கிய சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் இரவில் கடும் குளிர் வாட்டினாலும், பகலில் இதமான வெயிலுக்கு நடுவே வீசும் குளிர்ந்த காற்று என மாறுபட்ட சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர்.