கடந்த ஒரு வாரமாக வெயிலின்தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் சுற்றுலாத் தலமான ஏற்காட்டுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நேற்று வந்திருந்தனர்.
குளிர்காலம் விடைபெறும் நிலையில் இரவில் கடும் குளிர் நிலவினாலும், பகலில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் விடுமுறை நாட்களில் நீர் சார்ந்த சுற்றுலா தலங்கள், குளிர் நிறைந்த சுற்றுலா தலங்களை மக்கள் நாடிச் செல்கின்றனர்.
இந்நிலையில் ஞாயிறு விடுமுறை நாளான நேற்று சுற்றுலாத்தலமான ஏற்காட்டுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்தனர். இதனால் ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளை கூட்டமாக காண முடிந்தது. மேலும், காட்சி முனைப்பகுதிகளான பகோடா பாயின்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் மிகுந்திருந்தது.
சுற்றுலாத் தலமான மேட்டூர் அணை பூங்காவுக்கும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் பலர் அணைக்கட்டு முனீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர் குறைந்த அளவே நீர் செல்வதால் காவிரியில் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே, மேட்டூர் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக வந்திருந்து, பூங்காவில் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். பார்வையாளர்கள் வருகையால் அணை நிர்வாகத்துக்கு நேற்று ஒரே நாளில் பார்வையாளர் கட்டணமாக ரூ.38 ஆயிரம் கிடைத்தது.
ஆத்தூரை அடுத்த ஆனைவாரி முட்டல் அருவி, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம் மாநகராட்சி அண்ணா பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர்.