புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே ரூ.9 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவில் 10 அடி உயரத்தில் பேனா சிலை இடம் பெற்றுள்ளது.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிரில் காலியாக இருந்த இடத்தில் 5 ஏக்கரில் ரூ.9 கோடியில் பல்வேறு வசதிகளுடன்கூடிய பூங்கா அமைக்கும் பணி கடந்த 2020-ல் தொடங்கியது.
இங்கு, நடை பயிற்சி பாதை, சைக்கிள் ட்ராக், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆண், பெண்களுக்கென தனித்தனி உடற் பயிற்சி கூடம், கல் இருக்கைகள், நீரூற்றுகள், அறிவியல் மற்றும் கணித பூங்கா, ஹெல்த் பூங்கா, ஸ்கேட்டிங் பயிற்சி, வைஃபை போன்ற வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், உயர்கோபுர மின் விளக்கு, கழிப்பறைகள், குடிநீர் வசதி, யோகா பயிற்சி மேடை, திறந்தவெளி கலையரங்கம், அலுவலகம் உள்ளிட்ட வசதிகளும் முழு வீச்சில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவே அதிகபட்ச பரப்பளவில், கூடுதல் வசதிகளுடன் அமையும் முதல் பூங்காவாக உள்ளது.
இந்நிலையில், தற்போது இப்பூங்காவில் நுழைவாயில் அருகில் 10 அடி உயரத்தில் கான்கிரீட்டால் ஆன பேனா சிலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அதைச் சுற்றிலும் வட்ட வடிவில் நீரூற்று அமைக்கப்பட உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பேனா சிலை அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் நிறைவுறும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பூங்காவை ஆட்சியர் கவிதா ராமு அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.