கோப்புப்படம் 
சுற்றுலா

புனித யாத்திரை தளங்களுக்கான தேசிய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இரு திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஆன்மிகம், பாரம்பரியத்தை மேம்படுத்தும் புனித யாத்திரை தளங்களுக்கான தேசிய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இரு திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த தகவலை திமுக எம்.பி கனிமொழி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கான பதிலில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி எழுப்பிய கேள்வியில், 'தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சுற்றுலா வளர்ச்சிக்காக அடையாளம் காணப்பட்ட தளங்கள் எவை? அவற்றுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதி உதவி விவரங்கள் என்ன? இந்த தளங்களின் வளர்ச்சிக்காக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நிதிகள் பற்றிய விவரங்கள் என்ன? தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த, அதில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தும் வகையில் ஊக்குவிப்புகளை ஒன்றிய அரசு வழங்குகிறதா?' எனக் கேட்டிருந்தார்.

இக்கேள்விகளுக்கு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியின் எழுத்துபூர்வமான பதிலில் கூறியது: சுற்றுலா மேம்பாடு என்பதில் முதன்மையான பொறுப்பு மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கே உரியது. ஆனாலும் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் ‘ஸ்வதேஷ் தர்ஷன்’ திட்டத்தின் சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவதற்கும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு நிதி உதவி செய்கிறது.

மேலும், இந்தத் திட்டத்துக்கான நிதியுதவிகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தரும் முன்மொழிவுகள், ஆலோசனைகள், நிதி கையிருப்பு, பொருத்தமான திட்ட தகவல் அறிக்கைகள், வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்குதல், முன்பு ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சென்னை-மாமல்லபுரம்-ராமேஸ்வரம்-மணபாடு- கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கடலோர சுற்று வட்டார சுற்றுலா மேம்பாட்டுக்காக, ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், 2016-17 நிதியாண்டில் 73.13 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 69.48 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மத்திய சுற்றுலா அமைச்சகம், ‘ஆன்மிகம், பாரம்பரியத்தை மேம்படுத்தும் புனித யாத்திரை தளங்களுக்கான தேசிய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இரு திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி காஞ்சிபுரம் சுற்றுலா மேம்பாட்டுக்காக 2016-17 இல் 13.99 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு முழு தொகையும் விடுவிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் வேளாங்கண்ணி சுற்றுலா மேம்பாட்டுக்காக 4.86 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டு முழு தொகையும் விடுவிக்கப்பட்டது.

இப்போது தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதேநேரம் ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை, ‘உள்நாட்டு சுற்றுலா தளங்களை மேம்படுத்துதல், விருந்தோம்பல்’ திட்டத்தின் கீழ் பல்வேறு சுற்றுலா தளங்களை மேம்படுத்தி வருகிறோம். இவற்றில் சுற்றுச்சூழல் சுற்றுலா தொடர்பான தளங்களும் அடங்கும் என்று அவர் பதிலளித்துள்ளார்.

SCROLL FOR NEXT