உதகை: நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு வெளி நாடுகள், மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். புதிதாக ஏதேனும் சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும், சாகச விளையாட்டுகள் அடங்கிய சுற்றுலாவை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உதகை படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம், ஹெலிகாப்டர் சுற்றுலா ஆகியவற்றை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக உதகையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "சுற்றுலா தறை சார்பில் தற்போது படகு இல்லம் வளாகத்தில் புதிதாக சாகச விளையாட்டுகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கான முதற்கட்ட பணி நடைபெற்று வருகிறது. வரும் கோடை சீசனுக்குள் சாகச விளையாட்டுகளை அறிமுகம் செய்வதற்கான பணி துரிதமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ஏற்காடு, வால்பாறையைபோல, நீலகிரி மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் சுற்றுலாவை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசிக்கப் பட்டு வருகிறது. இதற்கான ஆய்வு பணி அதிகாரிகள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்படும்.
மேலும், 30 பேர் அமர்ந்து உணவு உட்கொள்ளும் வகையில், உதகை ஏரியில் மிதக்கும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், பிறந்த நாள் உட்பட பல்வேறு விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்படும். இதன்மூலமாக, பலரும் இந்த மிதக்கும் உணவகத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதுதவிர பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்றார்.