உதகை: பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, உதகை, உடுமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின்ஸ் நோஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்றுஅலை மோதியது.
உதகையிலுள்ள லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன. அதேபோல, சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டது. பகல்நேரங்களில் வெயில் அதிகமாககாணப்பட்டதால், அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர். கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, உதகையிலிருந்து கோவை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
உடுமலை: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று ஆயிரக்கணக்கானோர் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் கூடினர். சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களும், ஏராளமான வாகனங்களில் வருகை தந்தனர்.
இதனால் அருவிக்கு செல்லும் பாதையில் நெரிசல் ஏற்பட்டது. அடிவாரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல தை பொங்கல் தினத்தை முன்னிட்டு முன்னோர் வழிபாடு மேற்கொள்வதற்காக, அமராவதி ஆற்றின் கரையை ஒட்டிய கல்லாபுரம், கொழுமம், குமரலிங்கம், கடத்தூர், தாராபுரம், மூலனூர் உட்பட பல்வேறு ஊர்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் குளித்து சடங்குகளை மேற்கொண்டனர்.