கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்கள் சுற்றுலாப் பயணி களை வெகுவாகக் கவர்கின்றன.
கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் தோட்டக் கலைத் துறைக்குச் சொந்தமான பிரையண்ட் பூங்காவில் ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். இதைப் பார்த்து ரசிக்க வார விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மே மாதம் நடக்கவுள்ள 60-வது மலர் கண்காட்சிக்காக தோட்டக் கலைத் துறையினர் தற் போதிருந்தே பல்வேறு வகையான மலர் செடிகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், பிரையண்ட் பூங்காவில் குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஹார்னமென்டல் செர்ரி பூக்கள் சிவப்பு வண்ணத்தில் பூத்துக் குலுங்குகின்றன.
ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மட்டுமே இந்த வகைப் பூக்கள் பூக்கும். பூக்கள் பூக்கும்போது ஒரு இலைகூட மரத்தில் இருக்காது. பூ பூக்கும் தருணத்தில் அனைத்து இலைகளும் தானாகவே உதிர்ந்துவிடும் தன்மை உடை யது. இந்த வகைப் பூக்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் பூத்துக் குலுங்குகின்றன. இந்தப் பூக்களைச் சுற்றுலாப் பயணிகள் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.